மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை

விளாத்திகுளம் அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-04-15 19:30 GMT

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கொலையானவரின் நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

மது குடித்தபோது தகராறு

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் ரோஜா பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன்(வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். மகாராஜனும் அதே பகுதியை சேர்ந்த சக கூலி தொழிலாளிகளான அந்தோணி குரூஸ் மகன் மரியசெல்வம்(29), வெற்றிவேல் மகன் செல்வகுமார்(29) ஆகியோரும் நண்பர்கள்.

இவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் நண்பர்கள் 3 பேரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் தற்போது மூடப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறத்தில் உள்ள காட்டு பகுதியில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

உருட்டு கட்டையால் அடித்துக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த மரியசெல்வம் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மகாராஜனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் அடைந்த மகாராஜன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் மகாராஜன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.

2 பேர் கைது

இதுகுறித்து சூரங்குடி போலீசார் மரியசெல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:–

கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வகுமாரின் தந்தை வெற்றிவேலுடன் மகாராஜன் மது குடித்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த விசயத்தை சம்பவத்தன்று 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தபோது செல்வகுமார், மரியசெல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து மகாராஜனிடம் கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், மரியசெல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மகாராஜனை அடித்து கொன்றது தெரிய வந்தது. கைதான இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்