இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் 500 கிலோ பதப்படுத்தப்பட்ட மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இறைச்சி கடைகள்தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள ஒருசில இறைச்சி கடைகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சோதனை நடத்த மாவட்ட கலெக்டர் ரவிகுமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ராஜாமணி மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், அரிகணேஷ், ராஜபாண்டியன், கண்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவபாலன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், கால்நடை டாக்டர் ஜோசப்ராஜ், வருவாய் அலுவலர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள பன்றி, ஆடு, மாடு இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
பறிமுதல்இந்த சோதனையில் ஐஸ் பெட்டியில் வைத்து பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இறைச்சி 4 முதல் 5 நாட்கள் பதப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விற்பனைக்காக வைத்து இருந்த கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சிக்கு சொந்தமான லாரிகள் மூலம் தருவைகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள மாநகராட்சி குப்பை கிடங்களில் குழி தோண்டி கிருமி நாசினி தெளித்து புதைக்கப்பட்டது.
இனி இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.