மானாமதுரை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட பொதுமக்கள் எதிர்ப்பு
மானாமதுரை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக, குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மானாமதுரை அருகே கொன்னக்குளம், தத்தபுரக்கி, கட்டிக்குளம், துத்திக்குளம், வெள்ளிக்குறிச்சி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும் என்று சிவகங்கை கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் வேலூர் விலக்கு அருகே உள்ள ஒரு தனியார் சுத்திகரிப்பு நிறுவனம் சார்பில், சிவகங்கை கோட்டாட்சியர் உத்தரவிற்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து வருகிற 24–ந்தேதி வரை கோட்டாட்சியர் உத்தரவிற்கு தடை விதித்து, உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறைக்கு கோர்ட்டு ஆலோசனை கூறியது.
எதிர்ப்புகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மீண்டும் தனியார் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் தொடங்கின. இதனையறிந்த சுற்றுவட்டார கிராமமக்கள் குடிநீர் கேன்களை ஏற்றி சென்ற வேனை மறித்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வரும் வேளையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களால் மேலும் குறைய வாய்ப்புள்ளது. அவ்வாறு செயல்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்றனர்.