3. ஜோதிராவ் புலே: குலை நடுங்க வைத்த கொலை முயற்சி!

காலப்போக்கில் ரகசியமாகிவிட்ட ரகசியங்களைச் சொல்லும் இந்தத்தொடரில் இந்திய சமூகப்புரட்சியின் தந்தை ஜோதிராவ் புலேவும், அவரது மனைவி சாவித்திரியும் செய்த பணிகளைப் பார்த்து வருகிறோம்.

Update: 2017-04-15 12:43 GMT
காலப்போக்கில் ரகசியமாகிவிட்ட ரகசியங்களைச் சொல்லும் இந்தத் தொடரில் இந்திய சமூகப்புரட்சியின் தந்தை ஜோதிராவ் புலேவும், அவரது மனைவி சாவித்திரியும் செய்த பணிகளைப் பார்த்து வருகிறோம். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரி, பெண்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததற்காக எப்படியெல்லாம் தாக்கப்பட்டார் என கடந்த பகுதியில் பார்த்தோம். ஜோதிராவை கொலை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு உயர்வகுப்பினரை வேகப்படுத்தியது எது? இனி நீங்கள் படிக்கலாம்..

பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வி கண் திறக்கும் பணியில் வெற்றி பெற்ற ஜோதிராவ் புலேயும் அவரது மனைவி சாவித்திரியும் அன்றைக்கு ஆகப்பெரிய அவலமாக இருந்த விதவைகள் பிரச்சினையைக் கையில் எடுத்தனர். கணவனை இழந்த கைம்பெண் களின் தலை மொட்டை அடிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கையும் சூனியமாக்கப்பட்டது அன்றைக்கு மிக இயல்பாக நடந்தேறியது.

கணவனை இழந்த பெண்களின் அழகை குறைப்பதற்காகவும், வாழ்வின் மீது அவர்களுக்கு ஆசை ஏற்படுவதை தடுப்பதற்காகவும் மொட்டை அடித்து ஒதுக்குவதை சடங்காக்கி வைத்திருந்தார்கள். உயர் வகுப்பு எனப்படும் பிராமண சமூகத்தில் இந்த அவலம் தலை விரித்தாடியது. அதற்கு முடிவு கட்டுவதற்கான போர்க் குரலை ஜோதிராவும், சாவித்திரிவும் ஓங்கி ஒலித்தார்கள்.

முடி திருத்துவோரிடம் தொடர்ச்சியாக பேசி இந்த சமூக அவலத்தின் தீவிரத்தை அவர்களுக்குப் புரிய வைத்தார்கள். அவர்கள் வழியாக ‘விதவை பெண்களுக்கு இனிமேல் மொட்டை அடிக்க மாட்டோம்’ என்று முடி திருத்துவோர் வாயாலேயே சொல்ல வைத்தார்கள். இது அன்றைக்கு மிகப்பெரிய புரட்சியாக கருதப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்புக்கு இடையே விதவை ஒருவருக்கு மறுமணம் செய்து வைத்தார்கள். அதன் பிறகும் உயர் வகுப்பினரிடம் விதவை திருமணத்திற்கு எதிர்ப்பு குறையவில்லை. இதனால் ஜோதிராவ் அடுத்த அதிரடியை கையில் எடுத்தார். இயற்கையின் உந்துதலினால் வழி தவறி போய் கருவுற்ற இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகி கருக்கலைப்பு மரணங்களும், தற்கொலைகளும் நிகழ்வதைத் தடுக்க முடிவெடுத்தார். புனே நகரத்து வீதிகளில் ஜோதிராவின் புரட்சிகரமான கையெழுத்து பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

ஒரே நாளில் ஊரையே அதிரவைத்த அந்த பிரசுரங்களில் கீழ்காணும் பூகம்ப வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.

‘ஓ... இளம் விதவைகளே... ரகசியமாக இங்கு வந்து பிரசவம் பார்த்துச் செல்லுங்கள். உங்கள் இனிய விருப்பப்படி உங்கள் குழந்தைகளை எடுத்துச் செல்லலாம் அல்லது இங்கேயே விட்டுச் செல்லலாம். அனாதை இல்லம் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்’.

இத்தகைய வாசகங்களுடன் அமைந்த சுவரொட்டிகள் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தன. அதில் இருந்த நியாயத்தையும், ஆதரவு தேடி வந்தோரின் எண்ணிக்கையும் அத்தகைய இல்லத்திற்கான தேவையை உணர்த்தின. மிகப்பெரிய சமூக மாற்றமான ஜோதிராவின் இந்த ஆதரவற்றோர் இல்லமும் வெற்றிகரமாக நடந்தது. இந்தியாவில் இந்தியர் ஒருவரால் நடத்தப்பட்ட முதல் சமூக சேவை நிறுவனம் என்ற  பெருமையும் இதற்கு கிடைத்தது.

ஒரு புரட்சியாளன் எல்லா சிக்கல் களுக்குத் தீர்வு காணும்போதும் புரட்சியாளனாகவே இருப்பது மிகக் கடினமான செயல். உலகின் தலை சிறந்த புரட்சியாளர்கள் கூட சில இடங்களில் சமரசம் செய்து கொண்டு இருப்பார்கள். அல்லது சறுக்கியிருப்பார்கள். ஆனால் ஜோதிராவ் எனும் இந்திய சமூக புரட்சியின் தந்தை தன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் புரட்சியாளராகவே நடந்து கொண்டார்.

ஜோதிராவ்–சாவித்திரி தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் ஜோதிராவின் தந்தை அவரை இன்னொரு திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். உறவினர்களும் நெருக்குதல் கொடுத்தனர். சாவித்திரியின் பெற்றோர் வழியாகவும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள ஜோதிராவ் வற்புறுத்தப்பட்டார்.

ஜோதிராவுக்கு இதில் உடன்பாடு இல்லை. ‘குழந்தை பிறக்காததற்காக பெண்ணை மட்டும் மலடி என்று சொல்வது அநீதியானது’ என்றார். ‘ஆண் கூட மலடாக இருக்கலாம் அல்லவா?’ என்று கேள்வி எழுப்பினார். ‘ஆணை மலடு என்று சொல்லி ஒரு பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டால் அந்த ஆண் ஏற்றுக்கொள்வானா? தான் சிறுமைப்படுத்தப்பட்டதாகதானே நினைப்பான். அப்படி இருக்கும் போது பெண்ணுக்கு மட்டும் எப்படி இந்த அநியாயத்தைச் செய்ய முடியும்?’ என்று கேட்டு தன் நிலைபாட்டை தெளிவுப்படுத்தினார்.

அதன் பிறகு மரணப்படுக்கையில் விழுந்த அவரது தந்தை, தன் மகனுக்கு வாரிசு இல்லாமல் போய்விடுமே என்று கவலைப்பட்டு இரண்டாம் திருமணத்திற்கு மீண்டும் வலியுறுத்தினார். இருந்தாலும் தன் கொள்கையில் இருந்து ஜோதிராவ் மாறவே இல்லை. அவரும் சாவித்திரியும் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளை தன் பிள்ளைகளை போல் எண்ணி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அந்த பிள்ளைகளின் மத்தியில் இருக்கும் போது முகமெல்லாம் புன்னகையும் உள்ளமெல்லாம், மகிழ்ச்சியும் பொங்க ஆனந்தத்தில் சாவித்திரி கரைந்திடுவாள். சில ஆண்டுகளுக்குப் பின்னர், ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்த யஷ்வந்த் என்ற சிறுவனை ஜோதிராவ் தம்பதி தத்தெடுத்து வளர்த்தனர்.

ஜோதிராவின் செயல்களால் உயர் வகுப்பினரும், மாற்று கருத்துடையோரும் அவர் மீது கடும் வெறுப்பு கொண்டிருந்தனர். எத்தனையோ விதமான அச்சுறுத்தல்களைக் கொடுத்த போதிலும் எதற்கும் கலங்காமல் களத்தில் நின்று போராடினார். இதனால் ஒரு கட்டத்தில் அவரைக் கொன்று விட திட்டம் தீட்டப்பட்டது.

எந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காக, உயிரை பணயம் வைத்து ஜோதிராவ் போராடி வந்தாரோ அந்த சமூகத்தில் இருந்தே இரண்டு பேரை கொலை பணிக்காக தேர்வு செய்தார்கள். இதற்காக ரோடெ மற்றும் கும்பர் என்ற இரண்டு பேர் கூலிக்கு அமர்த்தப்பட்டனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜோதிராவைக் கொல்வதற்காக இருவரும் நெருங்கும்போது ஜோதிராவ் அரவம் கேட்டு விழித்துக்கொண்டார். தூக்கம் கலைந்த சாவித்திரியும் பதற்றத்தோடு அவர் பக்கத்தில் வந்து நின்றார்.

விளக்கின் ஒளியைத் தூண்டியபடி ‘யார் நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர் கள்?’ என்று கேட்டபடியே ஜோதிராவ் எழுந்தார்.

கையில் கத்திகளுடன் நின்று கொண்டிருந்த அவர்கள், ‘உங்களைக் கொல்வதற்காக வந்திருக்கிறோம்’ என்றார்கள்.

‘எதற்காக என்னைக் கொல்லப்போகிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்?’ என ஜோதிராவ்  கேட்டார்.

‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது உங்களைக் கொல்லச் செல்லி அவர்கள்தான் எங்களை அனுப்பிவைத்தார்கள்’ என்றனர்.

‘என்னைக் கொல்வதால் உங்களுக்கு என்ன லாபம்?’ என்று ஜோதிராவ் கேட்டார்.

‘உங்களைக் கொன்று விட்டால் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்லி இருக்கிறார்கள்’.

பதிலைக் கேட்டவுடன் ‘அப்படியா என் மரணத்தில் உங்களுக்கு லாபம் இருக்குமானால், உங்கள் முன்னால் தான் நான் இருக்கிறேன். எந்த மக்களுக்காக நான் பாடுபடுகிறேனோ அந்த சமூகத்து மனிதர்களே என்னைக் கொல்வது எனக்கு பெருமை தான். உடனே கொல்லுங்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே எனது வாழ்க்கை. எனது மரணத்திலும் கூட அவர்களே பலன் அடைகிறார்கள் என்பதில் மகிழ்ச்சிதான்’ என்று சொல்லி ஓரடி முன்னே எடுத்து வைத்தார்.

எவ்வளவு பெரிய கல் நெஞ்சையும் கரைத்துவிடும் இந்த வார்த்தைகள் கூலிக்கு கொல்ல வந்தவர் களின் இதயத்தையும் குத்தியது. என்ன செய்வதென்றே புரியாமல் ஒரு கணம் நிலை குலைந்த அவர்கள் கையில் இருந்த ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சடாரென ஜோதிராவின் கால்களில் விழுந்து எழுந்தனர்.

தங்களை ஏவியவர்களைக் கொலை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு ஜோதிராவிடம் கேட்டனர். ஆனால் அரிய மனிதராக வாழ்ந்த ஜோதிராவ் ‘அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர் களுக்கே தெரியாது. நீண்ட காலம் அவர்கள் வாழட்டும்’ என்று தன்னைக் கொல்ல ஆள் அனுப்பிய எதிரிகளையும் மன்னித்தார்.

ஆமாம் உலகின் ஆகப்பெரிய தண்டனை மன்னிப்பதுதானே. இந்த சம்பவத்திற்குப் பிறகு ஜோதிராவை கொல்ல வந்தவர்கள் அவருக்குப் பக்தர்களாகவே மாறிவிட்டனர். ஜோதிராவின் இரவு நேரப் பள்ளியில் படித்தனர். அவர்களில் ஒருவன் ஜோதிராவின் பாதுகாவலராகவும் இன்னொருவன் பண்டிதராகவும் மாறிவிட்டனர்.

சாதியக்கொடுமைகளுக்கு எதிராக போராடிய ஜோதிராவ், கடவுள் குறித்து சொன்னதென்ன? இறை வழிபாட்டைப் பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் அவரது கருத்துகள் சரியா? அவரது மனைவி சாவித்திரியின் வாழ்க்கையில் என்ன செய்தார்?

(ரகசியங்கள் தொடரும்)

ஆங்கிலேயரை எதிர்க்காதது ஏன்?

சமூகக்கொடுமைகளுக்கு எதிராக போராடிய ஜோதிராவ் புலே, ஆங்கிலேயருக்கு எதிராக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஏனெனில் ஆங்கிலேயர் ஆட்சி இருப்பதால்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கல்வி கிடைக்கிறது என்று நம்பினார். அவரது வார்த்தைகளில், ‘ஆங்கிலேயர் ஆட்சி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதில் ஒரு நிச்சயம் இல்லை. ஆனால் அதற்குள் இம்மக்கள் அனைவரும் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும். அறியாமை, தவறான எண்ணங்கள்  ஆகியவற்றை நீக்கிக்கொண்டு உயர்வகுப்பினரால் இறுக்கமாக கட்டப்பட்டுள்ள அடிமைக் கயிற்றை அறுத்தெறிய வேண்டும்’ என்றார் புலே.

தலைவர்களை  உருவாக்கியவர்

தீண்டாமையை ஒழிக்கும் பணியில் இன்னொரு முக்கியமான வேலையையும் ஜோதிராவ் செய்தார். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் மத்தியில் இருந்தே தலைவர்களை உருவாக்கினார். அவர்கள் வாழும் பகுதிக்குச் சென்று, அங்கே புத்திக்கூர்மையும் செயல்திறனும் மிகுந்தவர்களை அடையாளம் கண்டு சமூகப்பணிகளைச் செய்ய வைத்தார். அத்தகையோரை எழுதவும் பேசவும் சொன்னார். கோபால் பாப வலங்கர் போன்றோர் அப்படி உருவாக்கப்பட்டவர்கள்தான்.

சொத்து விரும்பாத மனம்

சமூகப்பணிகளுக்கும் ஜீவாதார வாழ்க்கைக்கும் பணத்தேவை ஜோதிராவுக்குத் தொடர்ந்து இருந்து வந்தது. ஆனாலும் சொந்த உழைப்பில் வாழவே அவர் விரும்பினார். தன் தனிப்பட்ட வாழ்வின் தேவைகளுக்குப் பிறரை சார்ந்து இருப்பதை அவர் எப்போதும் விரும்பியதில்லை. குடும்பத்தில் சொத்து குறித்த சில பிரச்சினைகள் இருந்த போதும் அவற்றில் விட்டுக்கொடுப்பவராகவே ஜோதிராவ் இருந்தார். சொத்துக்காக தன் மாமா குடும்பத்தினரிடம் சண்டையிடுவதை அவர் விரும்பவில்லை.

மேலும் செய்திகள்