மாணவர்களுக்கு பாடம் நடத்தாத அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்

மாணவர்களுக்கு பாடம் நடத்தாத அரசு பள்ளி ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி மஞ்சுளா உத்தரவிட்டார்.

Update: 2017-04-14 23:16 GMT
கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். மேலும் இவர் தாலுகா கல்வி கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார். இதனால் சந்திரசேகர் பள்ளிக்கு சரியாக செல்லாமலும், மாணவர்களுக்கு பாடம் நடத்தாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கல்வி அதிகாரிக்கு புகார்கள் தெரிவித்தனர். இதையடுத்து தாலுகா கல்வி அதிகாரி திம்மேகவுடா, சந்திரசேகருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால் விசாரணைக்கு சந்திரசேகர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் அவர், கல்வி அதிகாரி திம்மேகவுடாவிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பணி இடைநீக்கம்

இதையடுத்து திம்மேகவுடா, மாவட்ட கல்வி அதிகாரி மஞ்சுளாவிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய மஞ்சுளா, ஆசிரியர் சந்திரசேகரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்துள்ளார்.

மாணவர்களுக்கு பாடம் நடத்தாத அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்