புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உள்பட 6 பேர் உண்ணாவிரதம்
புழல் சிறையில் அடைக்கப்பட்ட இயக்குனர் கவுதமன் உள்பட 6 பேரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
செங்குன்றம்,
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர் கவுதமன் தலைமையில் 20–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று முன்தினம் காலை சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மேம்பால சாலையை சங்கிலியால் கட்டி பூட்டு போட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமன்(வயது 44), கல்லூரி மாணவர் அரவிந்த்(22), உமாகார்கி(23), கோபாலகிருஷ்ணன்(47), பிரபாகரன்(26), அருள்(30) ஆகிய 6 பேரை பரங்கிமலை போலீசார் கைது செய்தனர்.
அனைவரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உண்ணாவிரதம்புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இயக்குனர் கவுதமன் உள்பட 6 பேருக்கும் நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள், உணவை சாப்பிட மறுத்து காலை முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இயக்குனர் கவுதமன் உள்பட 6 பேரிடமும் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.