எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்லூரிகளில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச கல்வி

எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்லூரிகளில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை எந்த சக்தி தடுத்தாலும் நிறைவேற்றியே தீருவோம்: முதல்- அமைச்சர் நாராயணசாமி

Update: 2017-04-14 23:30 GMT
புதுச்சேரி

புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நிறைவு மற்றும் 126-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பீம் ஜோதி தொடர் ஓட்டம்

புதுவை கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஏற்கனவே இருந்த சிலையை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அந்த சிலையை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். முன்னாள் எம்.பி. ராமதாஸ் எழுதிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

புதுவையில் 5 இடங்களில் இருந்து 125 மாணவ, மாணவிகள் 125 கி.மீ. தூரம் தொடர் ஓட்டமாக கொண்டு வந்த பீம் ஜோதியை அவர் பெற்றுக்கொண்டார். விழாவுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். நலத்துறை செயலாளர் மிகிர்வரதன் வரவேற்றுப் பேசினார்.

கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்க்கையை அர்ப்பணித்தவர்

நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அம்பேத்கர். அவரை சாதி என்ற ஒரு வளையத்துக்குள் வைக்கக்கூடாது. அவர், தான் சார்ந்த சமுதாய வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடவில்லை. அனைத்து சமுதாய வளர்ச்சிக்கும் பாடுபட்டார்.

அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை உலகில் 50 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. எனது அரசியல் வாழ்வில் என்னோடு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் பேர் இருந்துள்ளனர். அவர்களுக்காக நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் ஏராளமாக உள்ளன. எனது ஒரு கண் தலித் சமுதாயத்தினர், மற்றொரு கண் பிற சமுதாயத்தினர்.

முழு கட்டணத்தையும் அரசு ஏற்கும்

அம்பேத்கரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பது போல் எந்த சமுதாயமாக இருந்தாலும் ஏழை மக்களுக்கு சேவை செய்வது எங்கள் கடமை. எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்லூரிகளில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்று இலவசமாக கல்வி அளிப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு எடுத்தோம். இதற்காக அமைச்சரவையில் ஒரு மணிநேரம் விவாதித்தோம்.

(எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங் போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு சென்டாக் மூலம் தேர்வாகும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டணத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை அரசு தற்போது செலுத்தி வருகிறது.)

இதை நிறைவேற்றுவது எங்கள் கடமை. எந்த சக்தி தடுத்தாலும் அதை நிறைவேற்றாமல் விடமாட்டோம். எங்கள் அரசு வசதிபடைத்தவர்களுக்கான அரசு அல்ல. சமுதாய வளர்ச்சிக்கான அரசு. கடந்த ஆண்டு சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவிட்டுள்ளோம்.

இடஒதுக்கீடு மசோதா

நான் மத்திய மந்திரியாக இருந்தபோது, உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை பாராளுமன்ற மேலவையில் நிறைவேற்றினோம். மக்களவையில் அதை நான் தாக்கல் செய்தபோது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை கொண்டே அந்த மசோதாவை எதிர்க்கட்சியினர் பறிக்கச் செய்தனர்.

அதை அந்த எம்.பி.யிடம் இருந்து பறித்து மீண்டும் என்னை தாக்கல் செய்ய வைத்தார் சோனியாகாந்தி. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் செய்த அமளியால் அந்த மசோதா நிறைவேறாமல் போனது. ஆனால் காலம் மாறும். நாங்கள் அதை நிறைவேற்றியே தீருவோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அமைச்சர் கந்தசாமி

விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஏற்கனவே இருந்த சிலையின் முகத்தோற்றம் சரியில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதை சரிசெய்ய கடந்த கால அரசு முன்வரவில்லை. நாங்கள் அதை இப்போது சரிசெய்துள்ளோம். சட்டமன்றம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடையும் வைக்கப்பட்டுள்ளது. உப்பளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடை அமைக்க உள்ளோம். அபிஷேகப்பாக்கத்திலும் அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைக்க உள்ளோம்.

அம்பேத்கர் ஒரு சமுதாயத்துக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் படிக்கவும், உழைக்கவும் தயாராக இருக்கவேண்டும். அதைவிட்டு விட்டு நாம் எதையும் பேசக் கூடாது. முதல்-அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோதும், தற்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமியும் நான் எதை சொன்னாலும் கேட்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்று என்னை பார்ப்பதில்லை.

இந்திராகாந்திக்கு மணிமண்டபம்

என்னை யாரும் அம்பேத்கரோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டாம். அவ்வாறு ஒப்பிடுவது சரியாக இருக்காது. எல்லா சமுதாயத்திலும் ஏழைகள் உள்ளனர். அவர்களும் முன்னேறும் வகையில்தான் எனது செயல்பாடு இருக்கும். சிறப்புக்கூறு நிதியை தனியாக பெற்றதில் காங்கிரசில் அனைவரது பங்கும் உள்ளது. அந்த நிதியை உருவாக்கியவரே இந்திராகாந்திதான். எனவே அவருக்கும் அம்பேத்கர் மணிமண்டபம் அருகே மணிமண்டபம் அமைத்து ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வியை தர திட்டம் தீட்டினோம். ஆனால் அதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள். அந்த கோப்பு கவர்னர் மாளிகைக்கு சென்று திரும்பித்திரும்பி வருகிறது. அதை தடுப்பது நியாயமா? நமக்கு இலவசத்தைவிட கல்விதான் முக்கியம்.

உறைவிடப்பள்ளி

மாலைநேரங்களில் படிக்க வசதியாக சூடான பாலுடன் சுண்டல் தருவோம் என்று முன்பு அறிவித்தோம். அதையும் விரைவில் நிறைவேற்றுவோம். வருங்காலத்தில் உறைவிடப்பள்ளியும் உருவாக்குவோம்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

விழாவில் அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்