எதையும் நல்ல கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்: அதிகார எல்லையை தாண்டும்போது தான் பிரச்சினை வருகிறது

எதையும் நல்ல கண்ணோட்டத்தோடுதான் பார்க்க வேண்டும். அதிகார எல்லையை தாண்டும்போதுதான் பிரச்சினை வருகிறது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.

Update: 2017-04-14 23:00 GMT

புதுச்சேரி

புதுவை கடற்கரை சாலையில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரைநிலைக்கழகம் சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை தாங்கி சபாநாயகர் வைத்திலிங்கம் பேசியதாவது:–

இந்தியர்களாகிய நாம் ஒற்றுமையாக இருப்பதற்கு அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம்தான் காரணம். இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் உலகில் பல நாடுகள் சுதந்திரம் அடைந்தன. ஆனால் அங்கெல்லாம் ஜனநாயகம் உள்ளதா? என்று பார்த்தால் அது சந்தேகம் தான். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடக்கிறது.

இங்கு சட்டத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அதிகாரம் என்பதும் சமமாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அரசியலமைப்பு உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. புதுவையில் 4 மொழி பேசும் மக்கள் இருந்தாலும் நாம் ஒற்றுமையாக இருக்க காரணம் அரசியலமைப்பு சட்டம்தான்.

எல்லை தாண்டுவதால் பிரச்சினை

இத்தகைய நிலையில் புதுச்சேரியில் சில குழப்பங்கள். இங்கு ஒரு சட்டமன்றம் உள்ளது. நமது அரசியலமைப்பில் சட்டமன்றம், பாராளுமன்றம், நீதிமன்றம், ஜனாதிபதி என பல அமைப்புகள் உள்ளன.

இதில் சட்டமன்றம்தான் பெரியது, நீதிமன்றம்தான் பெரியது, நிர்வாகிதான் பெரியவர் என்று சிலர் கூறுகிறார்கள். இவற்றுக்கு சம அளவு அந்தஸ்து தந்தது அம்பேத்கர்தான். யாராக இருந்தாலும் அவர்களது அதிகார எல்லைக்குள் இருந்துதான் செயல்பட முடியும். அதைத்தாண்டும்போது தான் பிரச்சினைகள் வரும்.

புதுச்சேரி ஒருபோதும் கெட்டதில்லை. ஆனால் இப்போது சிலர் அதை சீர்செய்வதுபோல் பேசுகிறார்கள். இதை திருத்த முடியதாம். யார், யார் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்களது பார்வையை சரியாக செலுத்தினால் நன்றாக இருக்கும். எதையும் நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஏன் கெட்டதையே நினைக்கிறீர்கள்.

புதுவை வந்து யாராவது கெட்டதுண்டா? மகான் அரவிந்தர், பாரதியார் வந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது புதுச்சேரிதான். நாம் எல்லை தாண்டாமல் இருக்க நினைக்கிறோம். அந்த விதியையே கடைபிடிப்போம்.

இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார்.

அனந்தராமன்

அரசு கொறடா அனந்தராமன் பேசியதாவது:–

புதுவையில் மக்களாட்சி நடக்கவேண்டும். ஆனால் ஒருவர் இந்த ஆட்சிக்கு நான்தான் தலைவர், அதிகாரம் மிக்கவர் என்றெல்லாம் பேசி வருகிறார். இப்போது நாம் அம்பேத்கர் சொன்னபடி, கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்பதை நிறைவேற்ற வேண்டும். மக்களின் விருப்பப்படி இந்த ஆட்சி அமைந்துள்ளது.

மக்கள் ஆட்சி நடந்தால்தான் கல்வியிலும், சமூகத்திலும் முன்னேற்றத்தை உருவாக்க முடியும். மக்களாட்சிக்கு முட்டுக்கட்டையாக கொல்லைப்புறமாக வந்தவர் செயல்படுகிறார். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். மீனை கொடுப்பதைவிட மீன்பிடிக்க கற்றுக்கொடுங்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி தரும் உத்தரவாதத்தை அமைச்சர் கந்தசாமி வழங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை செயலாளர்

விழாவில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா பேசும்போது, ‘சமதர்ம சமுதாயத்தை உருவாக்க பாடுபட்ட அம்பேத்கர் வழியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது. அவரது தலைமையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’ என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்