மாமல்லபுரத்தில் போலீஸ் அனுமதி வழங்கிய பாதையில் அம்பேத்கர் ரத ஊர்வலம்

மாமல்லபுரத்தில் போலீஸ் அனுமதி வழங்கிய பாதையில் அம்பேத்கர் ரத ஊர்வலம் நடந்தது.

Update: 2017-04-14 22:45 GMT

மாமல்லபுரம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புதிய சிலை நிறுவி, அம்பேத்கர் ரத ஊர்வலம் நடத்த அந்த கட்சியினர் முடிவு செய்து இருந்தனர். இந்த ரத ஊர்வலம் நடத்த போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி ரத ஊர்வலம் நடத்துவோம் என்று அந்த கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து நேற்று அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்பேத்கர் சிலையுடன் கூடிய ரத ஊர்வலத்தை கங்கை கொண்டான் மண்டபத்தில் இருந்து தொடங்க அந்த கட்சியினர் தயாரானார்கள்.

பதற்றம்

இதையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி ரத ஊர்வலம் நடத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, மாநில தொண்டரணி செயலாளர் வீ.கிட்டு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேறு பாதையில் ஊர்வலம்

அப்போது வேறு பாதையில் அம்பேத்கர் ரத ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குவதாக போலீசார் கூறியதன் பேரில் அந்த கட்சியினர் சமாதானம் அடைந்தனர்.

பிறகு போலீஸ் அனுமதி வழங்கிய கோவளம் சாலை, வடக்கு மாமல்லபுரம் வழியாக அம்பேத்கர் ரத ஊர்வலம் நடத்தப்பட்டது. அங்கு அம்பேத்கர் சிலைக்கு அந்த கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்