தா.பேட்டை அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தா.பேட்டை அருகே பொன்னுசங்கம்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2017-04-14 22:45 GMT

தா.பேட்டை,

தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் கண்ணனூர் பாளையம் பிரிவுரோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மெயின்ரோட்டில் செயல்பட்டு வந்த அந்த டாஸ்மாக் மதுபானக்கடை அகற்றப்பட்டது.

 இதையடுத்து டாஸ்மாக் கடை பணியாளர்கள் கண்ணனூரை அடுத்த பொன்னுசங்கம்பட்டி காட்டுகொட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்திட சுப்ரமணியன் என்பவரது தொகுப்பு வீட்டினை தேர்வு செய்துள்ளனர். இதற்காக அந்த வீட்டின் ஒரு பகுதியில் டாஸ்மாக் கடைக்கு ஏற்றவாறு இரும்பு கதவுகள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

 இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், நேற்று சுப்ரமணியன் வீட்டின் முன்பு திரண்டுவந்து டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் தாசில்தார் சந்திரக்குமார், வருவாய் ஆய்வாளர் சிவநேசன், ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பத்மா, பெரியமணி ஆகியோர் அங்கிருந்த பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது டாஸ்மாக் கடைக்கு இடம் கொடுக்க முடிவு செய்த சுப்ரமணியன் தனது முடிவை மாற்றிக் கொண்டதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தில் டாஸ்மாக் கடை அமைத்திட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்