ராப்பூசலில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 51 பேர் காயம்

இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசலில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர்.

Update: 2017-04-14 22:45 GMT

இலுப்பூர்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசலில் முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதையொட்டி நேற்று காலை முனியாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி கோவில் காளை அங்கிருந்து மேள, தாளங்கள் முழங்க அழைத்து வந்து, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. கோவில் காளையை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கலெக்டர் கணேஷ் முன்னிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், சேலம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 590 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினார்கள்.

இதில் சில காளைகள் தன்னை பிடிக்க வந்த மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடியது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் விழாக்கமிட்டியினர் சார்பில் வெள்ளிக்காசு, வேட்டி உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

51 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் மொத்தம் 214 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 51 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார் நிலையில் இருந்த வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் ராக்கதம்பட்டியை சேர்ந்த ராஜூவ்காந்தி(வயது 23), அக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகப்பாண்டி(20), காலாடிப்பட்டியை சேர்ந்த சதீஸ்குமார்(28), ராப்பூசலை சேர்ந்த கார்த்திக்(25), திருச்சி பொன்மலையை சேர்ந்த மற்றொரு கார்த்திக்(27), ஆயிங்குடிப்பட்டியை சேர்ந்த வேலாயுதம்(22) உள்பட 9 பேர் மேல்சிகிச்சைக்காக அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2–வது முறையாக ஜல்லிக்கட்டு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், வருவாய் அதிகாரிகள் ராமசாமி, உதயகுமார், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, இலுப்பூர் தாசில்தார் தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுரு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் முதன் முதலில் அரசு அனுமதியுடன் நடந்த முதல் ஜல்லிக்கட்டு ராப்பூசலில் நடந்தது குறிப்பிடத்தக்கது. முனியாண்டவர்கோவில் திருவிழாவையொட்டி பங்குனி மாத கடைசி வாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டிருப்பதால், நேற்று 2–வது முறையாக ஜல்லிக்கட்டை நடத்தினார்கள். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை ராப்பூசல் கிராம மக்கள் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்