பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் கலெக்டர் வழங்கினார்
ரூ.40 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் பயனாளிகளுக்கு, பெரம்பலூர் கலெக்டர் நந்தகுமார் வழங்கினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் 494 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வழங்கினார். இதில் தீவனப்புல் நொறுக்கும் எந்திரம், பால் கறக்கும் எந்திரம், வயலுக்கு மருந்து தெளிக்கும் எந்திரம் உள்ளிட்ட வேளாண்கருவிகளை பயனாளிகள் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜகோபால், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைஇயக்குனர் அண்ணாதுரை, புதுவாழ்வுத்திட்ட பொது மேலாளர் ரூபவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.