அரியலூர் அரசு மருத்துவமனையில் பழைய கட்டிடங்கள் இன்னும் சில நாட்களில் இடிக்கப்படுகிறது

ரூ.10½ கோடியில் நவீனப்படுத்துவதற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் பழைய கட்டிடங்கள் இன்னும் சில நாட்களில் இடிக்கப்படுகிறது.

Update: 2017-04-14 23:00 GMT

அரியலூர்,

ரூ.10½ கோடியில் நவீனப்படுத்துவதற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் பழைய கட்டிடங்கள் இன்னும் சில நாட்களில் இடித்து அப்புறப்படுத்தப்படுகின்றன. இதையொட்டி அங்கிருந்த நோயாளிகள் வேறு கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

அரியலூர் மருத்துவமனை வரலாறு

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு சிறந்த கல்வியும், மருத்துவமும் மிக அவசியம் ஆகும். இவற்றால் தான் மக்களை ஆரோக்கியமானவர்களாகவும், அறிவாற்றலுடையவர்களாகவும் வைக்க முடியும். அந்த வகையில் சிமெண்டு ஆலைகள் அதிகம் உள்ள மாவட்டமான அரியலூரில் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரியலூர் மக்களின் ஆரோக்கியத்துக்காக 1933–ம் ஆண்டு அரியலூர் ரெயில் நிலையம் அருகே கீரைக்காரத்தெரு பகுதியில் சிறிய வீடு போல் மருத்துவமனை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1960–ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில ஆட்சித்தலைவர் விஷ்ணுராம் மேதி அரியலூர் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட புறநோயாளி விடுதி கட்டிடத்தை திறந்து வைத்ததன் மூலம் சிகிச்சை முறை மேம்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் தாலுகா மருத்துவமனையாக உயர்த்தப்பட்டது. எனினும் நவீனஉபகரணங்கள், போதிய கட்டிட வசதி, படுக்கை வசதி இல்லாததால் விபத்துக்கான உயர்அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காகவும், சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி போன்ற உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் தஞ்சாவூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

2011–ல் தரம் உயர்த்தப்பட்டது

இந்த நிலையில் தான் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மருத்துவமனையின் பின்புறமுள்ள காலி இடத்தில் புதிதாக சில கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதில் அவசர சிகிச்சை பிரிவு, பொதுஅறுவை சிகிச்சை அரங்கம், மகப்பேறு பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட முக்கியமான பிரிவுகள் நவீனஉபகரணங்களுடன் தொடங்கப்பட்டன.மேலும் கடந்த 2011–ம் ஆண்டு தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 20–12–2011–ல் அரியலூர் தாலுகா மருத்துவமனையானது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் பல்மருத்துவ சிகிச்சை பிரிவு, சித்தமருத்துவ சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள்–பெண்களுக்கான உள்நோயாளிகள் பிரிவு என 33 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு தற்போது வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் தினமும் சுமார் 2,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பழைய கட்டிடம் இடிப்பு

பொதுமக்களுக்கான மருத்துவ சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மருத்துவமனை வளாகத்திலுள்ள அம்மா உணவகத்தின் எதிரே இருந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை, செவிலிய கண்காணிப்பாளர் அறை, மருந்துகிடங்கு அறை, மருத்துவமனை அலுவலகம் உள்ளிட்ட சேதமடைந்த பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில் மாவட்ட ஆரம்பநிலை நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு மைய புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கிறது.

இதையொட்டி மத்தியஅரசின் தேசிய ஊரக சுகாதார இயக்க திட்டத்தின்கீழ் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பநிலை நோய் கண்டறிதல்–தடுப்பு மைய கட்டிடம் அமைய உள்ளது. ஆரம்ப நிலை நோய் கண்டறிதல்–தடுக்கும் மையம் நவீனஉபகரணங்களுடன் செயல்பட்டால் பிறந்த குழந்தை முதல் 6 வயதுடைய குழந்தை வரை இதய நோய், வளர்ச்சிகுறைபாடு, நரம்பியல் நோய் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு எளிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

உள்நோயாளிகள் சிகிச்சைபிரிவு கட்டிடம்

இதே போல் தமிழ்நாடு அரசு சிமெண்டு ஆலை விரிவாக்க திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 3 தளங்களுடன் கூடிய 200 படுக்கை வசதிகளை கொண்ட ஆண்கள், பெண்களுக்கான உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம், உலர் சலவையக கட்டிடம், ஆய்வக கட்டிடம், காத்திருப்போர் அறை உள்ளிட்டவற்றை புதிதாக கட்டுவதற்கு ரூ.7 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்காக நவீன மருத்துவ உபகரணங்கள், எந்திரங்கள் மற்றும் பொருட்கள் வாங்க ரூ.2 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் மாற்றம்

அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதால் மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை, செவிலிய கண்காணிப்பாளர் அறை ஆகிய இடங்களில் இருந்த பொருட்கள் வேறு அறைக்கு மாற்றப்பட்டு விட்டன. மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும் வேறு அறைக்கு மாற்றப்பட்டு விட்டனர். முதல் கட்டமாக பழைய பிளாக்கில் உள்ள சில சேதமடைந்த கட்டிடங்களுக்கு பூட்டு போடப்பட்டு இடித்து அகற்ற தயார் நிலையில் உள்ளன. இன்னும் சில நாட்களில் கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற உள்ளது என மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரமேஷ் தெரிவித்தார்.

சுவர்களுக்கு வர்ணம் பூச ரூ.25 ஆயிரம் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவகண்காணிப்பாளர் அறை உள்ளிட்ட பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக பழைய கட்டிடங்களில் இயங்கி வந்த பிரிவுகள் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளன. இந்த நிலையில் அரசு தலைமை மருத்துவமனை புதுப்பொலிவுடன் இருப்பதற்காக சுவர்களுக்கு வர்ணம் பூச மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம் வழங்கினார். இந்த நிதியுடன் மருத்துவமனையில் உள்ள நிதியையும் சேர்த்து சுவர்களுக்கு வெள்ளையடித்து வர்ணம் பூசும் பணிகள் துரிதமாக நடக்கிறது.

மேலும் செய்திகள்