தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார். சாமிக்கு அபிஷேகம் செய்ய தீர்த்தம் எடுக்க வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நிழலிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சேமலையப்பன். விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுடைய மகள் அபிநந்தினி (வயது 19). மகன் மூர்த்தி (21). அவினாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நிழலிகவுண்டன்பாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன், கருப்பராய சாமி, கன்னிமார் சாமி கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்புத்தாண்டு தினத்தன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அப்போது சாமிக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெறும்.
ஆற்றில் இறங்கி குளித்தனர்இதற்காக கிராமத்தில் உள்ளவர்கள் வாகனம் மூலம் கொடுமுடிக்கு சென்று, அங்குள்ள காவிரி ஆற்றில் தீர்த்தம் முத்தரித்து கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது கொடுமுடி காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததாலும், அமராவதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாலும், இந்த தண்ணீர் தாராபுரம்–அலங்கியம் பாலத்தை கடந்து சீத்தக்காடு தடுப்பணைக்கு வந்து விட்டதாலும், அங்கு சென்று தீர்த்தம் முத்தரித்து கொண்டு வர கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று நிழலி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் தீர்த்த குடங்களுடன் வாகனத்தில் ஏறி தாராபுரம் வந்தனர். இவர்களுடன் சேமலையப்பனின் மகன் மூர்த்தியும் வந்தார். பின்னர் அனைவரும் தாராபுரம்–அலங்கியம் சாலையில் உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் இறங்கி ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது மூர்த்தியும் ஆற்றில் இறங்கி குளித்தார்.
தண்ணீரில் மூழ்கி பலிஅப்போது மூர்த்தி ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டார். இதனால் தண்ணீரில் தத்தளித்த அவர் ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்,’’ என்று அபயக்குரல் எழுப்பினார்.
உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று மூர்த்தியை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் தண்ணீரில் மூர்த்தி மூழ்கினார். உடனே தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி அரிராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று, ஆற்றில் இறங்கி மூர்த்தியின் உடலை தேடினார்கள். சுமார் 3 மணி நேரதேடுதலுக்கு பிறகு மூர்த்தியின் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
போலீசார் விசாரணைபின்னர் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூர்த்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீர்த்தம் முத்தரிப்பதற்காக அமராவதி ஆற்றுக்கு வந்து, குளிக்கும் போது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆற்றில் குழிகள் இருப்பது தெரியாததால் பரிதாபம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் தான் அலங்கியம் ஆற்றுப்பாலத்திற்கு வந்துசேர்ந்தது. தீர்த்தம் முத்தரிக்க வந்த பக்தர்கள் முதலில் தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பகுதிக்குத்தான் சென்றுள்ளனர். அந்த பகுதிக்கு இன்னும் தண்ணீர் வந்து சேராததால், அதன் பிறகு அலங்கியம் ஆற்றுப்பாலத்திற்கு சென்றுள்ளனர்.
அந்தபகுதியில் ஆற்றில் இருந்த பெரிய குழிகள் பக்தர்களுக்கு தெரியவில்லை. அதனால் தான் மூர்த்தி ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது யாரும் அவரை தடுக்கவில்லை என்று தெரிகிறது. தாராபுரம் பகுதிக்கு அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி மாணவர் இறந்து இருப்பது பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அமராவதி ஆற்றில் குழிகள் உள்ளபகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.