கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

கொடைக்கானலில், நேற்று தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-04-14 23:15 GMT

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தற்போது குளு, குளு சீசன் தொடங்கும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தொடர் வார விடுமுறையின் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.

இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஏரிச்சாலை முதல் அப்சர்வேட்டரி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போதிய போலீசார் இல்லாத காரணத்தால் வாகன ஓட்டுனர்களே போக்குவரத்தினை சீரமைத்தனர். மேலும் பல்வேறு சுற்றுலா இடங்களிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒருவழிப்பாதை

இதனிடையே நேற்று நகரில் உள்ள மூஞ்சிக்கல், அண்ணாசாலை பகுதிகளில் ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலையில் இருந்தது. அதேபோல் ஏரிச்சாலையையும் ஒருவழிப்பாதையாக அறிவிக்க வேண்டும் எனவும், வார விடுமுறை நாட்களில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த நிலையில் அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன. பல ஓட்டல்களில் சீசன் கட்டணம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டதால் அதன் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

உல்லாச படகு சவாரி

கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் உல்லாச படகு சவாரி செய்தனர். மேலும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள மலர்களையும் நீண்ட கியூவில் நின்று கண்டு ரசித்தனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்