உடன்குடியில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்

உடன்குடியில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-04-14 22:45 GMT

உடன்குடி,

உடன்குடி– குலசேகரன்பட்டினம் மெயின் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போது அந்த கடை, உடன்குடி– குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள முத்துநகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முருகன் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், சுப்புலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இருந்து கூட்டாம்புளி செல்லும் ரோட்டில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுப்பாடு மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நேற்று மதியம் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அரிகரன், அன்னத்தாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்