களக்காடு அருகே ஊருக்குள் சிறுத்தைப்புலி புகுந்து ஆடுகளை அடித்துக் கொன்றதால் பரபரப்பு

களக்காடு அருகே ஊருக்குள் சிறுத்தைப்புலி புகுந்து அட்டகாசம்: 4 ஆடுகளை அடித்துக் கொன்றதால் பரபரப்பு

Update: 2017-04-14 23:45 GMT

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் முதல் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ் (வயது 57). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்துக்குள் ஆடுகளை கட்டி போட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் மலையில் இருந்து சிறுத்தைப்புலி மூங்கிலடி ஊருக்குள் புகுந்தது. வேல்ராஜின் தோட்டத்துக்குள் சென்று அங்கு கட்டிப் போட்டிருந்த 4 ஆடுகளை சிறுத்தைப்புலி அடித்துக் கொன்றது. ஆடுகள் கத்தும் சத்தத்தை கேட்டதும் அங்கு பொதுமக்கள் விரைந்து வந்தனர். இதனால் மிரண்டு போன சிறுத்தைப்புலி தான் கடித்துச் சென்ற ஆடுகளின் உடல்களை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

வனத்துறையினர் ஆய்வு

இதுகுறித்து உடனடியாக களக்காடு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுத்தைப்புலியின் நடமாட்டம் காணப்பட்ட இடங்களில் பதிந்து இருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். ஏற்கனவே இங்குள்ள விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள், கரடிகள் நடமாட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடையம் அருகே மலையடிவாரத்தில் பெத்தான்பிள்ளை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்து வந்த நிலையில், தற்போது களக்காடு அருகே உள்ள மூங்கிலடி கிராமத்தில் சிறுத்தைப்புலி புகுந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

ஊருக்குள் நடமாடி வரும் சிறுத்தைப்புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மூங்கிலடி கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். வனப்பகுதியில் இருந்து மூங்கிலடி கிராமம் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதுவரை இங்கு சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்ததில்லை. தற்போது தான் முதல் முறையாக சிறுத்தைப்புலி வந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் மலையடிவார பகுதிக்கு இடம்பெயர்ந்து வருவதாகவும் பொதுமக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்