சித்திரை திருவிழா தொடர்பான சிறப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

சித்திரை திருவிழா தொடர்பான சிறப்பு கூட்டம், கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது.

Update: 2017-04-14 22:30 GMT

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சித்திரைத் திருவிழா–2017 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் கூறியதாவது:–

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வருகிற 27–ந்தேதி முதல் அடுத்த மாதம் 9–ந்தேதி வரையிலும், கள்ளழகர் கோவிலில் அடுத்த மாதம் 6–ந் தேதி முதல் 14–ந்தேதி வரையிலும் சித்திரை திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு கள்ளழகர், அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வண்டியூர் செல்லும் வரை 420 இடங்களில் திருக்கண் மண்டகப்படி அமைக்கப்பட உள்ளது. இந்த இடங்களில் அமைக்கப்படும் பந்தல்கள் கண்டிப்பாக இனி தகரத்தினால் கூரை வேயப்பட வேண்டும். காவல்துறையினர், காவல் கண்காணிப்புக்கு தற்காலிக உயர் கோபுரங்களை அமைக்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்–ஒழுங்கு பிரச்சினையின்றி திருவிழா பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதத்தில் புறநகர் பகுதியில் 350 காவலர்களும், மாநகர் பகுதிகளில் 600 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

குடிநீர் தொட்டிகள்

போக்குவரத்துத்துறையின் சார்பில் திருவிழா காலங்களில் காவல்துறையினருடன் கலந்தாலோசித்து மாற்று வழிகளில் பஸ்களை இயக்குவது குறித்தும், தேவையான சிறப்பு பஸ் வசதிகள் செய்வது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுரை மாநகராட்சி சார்பில் திருவிழா நடைபெறும் பகுதிகளில் 1500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும். சுகாதாரத்தினை உறுதி செய்யும் வகையில் பிளீச்சிங் பவுடர் தூவுதல், நடமாடும் கழிவறைகள் அமைத்தல் போன்ற பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரி, போக்குவரத்து துணை ஆணையர் ஏ.ஜி.பாபு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராசன், கள்ளழகர் கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, வருவாய் கோட்டாட்சியர்கள் அசோகன், பெனடிக் தர்மராய், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமாரி, தாசில்தார்கள் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்