புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புனித வெள்ளியையொட்டி சேலத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;
சேலம்,
ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளியாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ பேராலயங்களில் சிலுவை பாதை நிகழ்ச்சியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
அந்த வகையில் சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை ஏசு பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி நேற்று பங்கு தந்தை கிரகோரிராஜன் தலைமையில் பேராலய வளாகத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. அப்போது, ஏசுவை சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து திரளான கிறிஸ்தவர்கள், தங்களது கைகளில் சிலுவைகளை ஏந்தியவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இம்மானுவேல் பேராலயம்இதேபோல், அஸ்தம்பட்டி இம்மானுவேல் பேராலயத்திலும் நேற்று புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ.பேராலயம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், செவ்வாய்பேட்டை புனித மரியன்னை ஆலயம் உள்ளிட்ட சேலம் மாநகரில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் நேற்று புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை நிகழ்ச்சியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. சிலுவையில் அறையப்பட்ட ஏசு, மீண்டும் உயிர்த்தெழும் ஈஸ்டர் திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.