குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக புகார்: சேலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சேலத்தில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-14 22:30 GMT

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 45–வது வார்டு ஆண்டிப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கெத்தை, காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் நேற்றும் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடம், வாளி உள்ளிட்டவற்றில் பிடித்து கொண்டு திருச்சி மெயின் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், நல்ல குடிநீர் கிடைக்க அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்