புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஈஸ்டர் பண்டிகை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலங்களிலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலங்களிலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயம் சார்பில் புனித வெள்ளியையொட்டி அமலா பள்ளி வளாகத்தில் ஏசுநாதரை சிலுவையில் அறையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுநாதரை சிலுவையில் அறைவது போன்று தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.
இதை தொடர்ந்து பள்ளியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவைகளை ஏந்தி தூய இருதய ஆண்டவர் பேராலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு மறைமாவட்ட முதன்மை குரு சூசை மாணிக்கம், பங்கு தந்தை மதலைமுத்து, உதவி பங்கு தந்தை ஜோசப் ஸ்டான்லி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) இரவு ஏசுநாதர் உயிர்தெழும் நிகழ்ச்சி நடக்கிறது. தர்மபுரி வெண்ணாம்பட்டி வேப்பமரத்துக்கொட்டாய் ஏ.ஜி. சபையில் பாதிரியார் சுந்தர்சிங் தலைமையில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி ஏசுநாதர் சிலுவையில் அறையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரிமங்கலம்காரிமங்கலம் அருகே உள்ள கேத்தனஅள்ளி திருஇருதய ஆண்டவர் தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஏசு சிலுவையை சுமந்து சென்றதை நினைவுகூறும் விதமாக சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலயத்தில் இருந்து அனுமந்தபுரம் சாலையில் நடப்பட்டிருந்த சிலுவைகள் முன்பாக கிறிஸ்தவர்கள் சிலுவையை தாங்கி பிரார்த்தனை செய்தனர்.
அப்போது கிறிஸ்தவர்கள் ஏசுவின் பாடுகள் குறித்த பாடல்கள் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறுதியில் கல்வாரி மலையில் சிலுவைப்பாதை நிறைவுற்றது. இதில் பங்குத்தந்தை அருளப்பன் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தும்பலஅள்ளி அகதிகள் முகாமில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையிலும், பாலக்கோடு கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் பங்குத்தந்தை இருதயம் தலைமையிலும் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொம்மிடிசாவடியூரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை இருதயம் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வைத்தார். இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேப்போல் பொம்மிடியில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி முக்கிய வீதிகள் வழியாக சிலுவை பாதை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.