சிவகாசி–விஸ்வநத்தம் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய வலியுறுத்தல்

சிவகாசி–விஸ்வநத்தம் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும்

Update: 2017-04-14 22:45 GMT

சிவகாசி,

சிவகாசி நகராட்சியின் எல்லைப்பகுதியில் உள்ளது விஸ்வநத்தம். இந்த ஊருக்கு செல்லும் சாலையில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தெரு குழாய்களுக்கு இதன் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. இதை தொடர்ந்து அந்த குடிநீர் குழாயை அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்தனர். இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் அப்படியே விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மரணகுழியாக உள்ள பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும், அந்த பள்ளத்தை சரி செய்யவில்லை. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பள்ளத்தை மூடி அதன் மேல் மரக்கிளை ஒன்றை நட்டு வைத்துள்ளனர். இதனால் பகல் நேரங்களில் மட்டும் அந்த பகுதியில் விபத்தில் சிக்காமல் வாகன ஓட்டிகள் தப்பி செல்ல முடிகிறது. இரவு நேரங்களில் விபத்து ஏற்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

மேலும் சாலையின் மைய பகுதியில் இந்த பள்ளம் இருப்பதால் கனரக வாகனங்கள் அந்த பகுதியை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. இந்த பகுதியை கடந்து தான் விஸ்வநத்தம் ஊருக்கு செல்ல வேண்டும். அந்த பகுதியில் ஏராளமான பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளும், அச்சகங்களும் உள்ளன. இந்த ஆலைகளுக்கு மூலப்பொருட்களை கொண்டு வரும் வாகனங்களும், விஸ்வநத்தம் ஊருக்கு செல்லும் மினி பஸ்களும் பெரும் சிரமத்துடன் இந்த பகுதியை கடந்து செல்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து, அந்த பள்ளத்தை மூடும் பணியை உடனே செய்ய வேண்டும். மேலும் சேதம் அடைந்து காணப்படும் அந்த சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்