தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் சாமி–அம்பாள் தங்க ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா பழமை மாறாமல் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் சாமி–அம்பாள் தங்க ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Update: 2017-04-14 22:45 GMT

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும் காசிக்கு நிகராகவும் கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் சித்திரை மாத தொடக்கமான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை கருவறையில் உள்ள சாமி–அம்பாளுக்கு சிறப்பு மகாதீப ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணியளவில் சாமி–அம்பாள் தங்க ரி‌ஷப வாகனங்களில் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்பு சாமி–அம்பாள் பஞ்சமூர்த்தி பரிவாரங்களுடன் கோவிலின் 4 ரத வீதிகளை சுற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி, பகல் 12 மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்தனர்.

பஞ்சாங்கம் வாசிப்பு

பின்னர் கோவிலின் சாமி சன்னதியில் உற்சவர் முன்பு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பஞ்சாங்கத்தை குருக்கள் உதய்குமார் வாசித்தார். சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக நடந்த பஞ்சாங்கம் வாசிக்கப் பட்டதற்கு பின்பு சாமிக்கு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ்,உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், உதவிஆணையர் பாலகிருஷ்ணன், மேலாளர் லட்சுமிமாலா, சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியம், ககாரின்ராஜ், பேஷ்கார்கள் அண்ணாதுரை, செல்லம், நேர்முக உதவியாளர் கமலநாதன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழமை மாறாமல்

அது போல தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை முதலே கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடவும், சாமியை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர். பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பழமை மாறாமல் ராமேசுவரம் கோவிலில் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்