தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி *கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்புத்தாண்டு, புனிதவெள்ளி தினத்தையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

Update: 2017-04-14 23:00 GMT

ராமநாதபுரம்,

தமிழர்களின் புத்தாண்டு என்று அழைக்கப்படும் சித்திரைத்திருநாள் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. சித்திரை மாத தொடக்கமாகவும், தமிழ் ஆண்டின் தொடக்கமாகவும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை முதலே சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

புத்தாண்டு பிறந்ததையொட்டி தமிழ் மக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து, சாமி படங்களுக்கு மாலை மற்றும் பிரசாதம் படைத்து விளக்கேற்றி பெரியவர்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி நேற்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து சிலர் புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று, அருகில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

புனித வெள்ளி

இதுதவிர, அருகில் உள்ள உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று அங்குள்ள பெரியவர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தனர். புதுமணத்தம்பதிகள் வீட்டில் பெரியவர்களுடன் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததை காணமுடிந்தது. இதேபோல, ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படும் புனிதவெள்ளியை யொட்டி நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்