தமிழ் புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
தென் தமிழகத்தில் உள்ள குடவரை கோவிலில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பான ஹேவிளம்பி ஆண்டையொட்டி நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் சன்னதி அருகில் உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்.
காலை 10.30 மணி அளவில் வெள்ளி பல்லக்கில் கோவிலில் இருந்து நாதஸ்வரம் முழங்க அங்குச தேவரும், அஸ்திர தேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள குள படித்துறைக்கு வந்தனர். அங்கு வந்த அங்குச தேவருக்கும், அஸ்திர தேவருக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆராதனை நடைபெற்றது. பின்னர் பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கோவில் குளத்தில் சிவாச்சாரியாரால் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
அன்னதானம்புத்தாண்டையொட்டி நேற்று பகல் முழுவதும் கோவில் நடை சாத்தப்படாமல் இருந்ததையடுத்து, பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். மாலை விநாயகர், சந்திரசேகரர், கவுரியம்மன், சண்டிக்கேசுவரர் ஆகியோர் கோவில் பிரகார வலம் வந்தனர். பின்பு தமிழ் புத்தாண்டையொட்டி புத்தாண்டு பஞ்சாங்கமும் வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் மற்றும் வரிசையில் செல்ல நிழல் கொட்டகை வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் நச்சாந்துபட்டி அழ.பெரியகருப்பன் செட்டியார், காரைக்குடி நா.மாணிக்கவாசகம் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.