ஒடுகத்துர் அருகே அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு
ஒடுகத்தூரை அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் நடந்தன.
அணைக்கட்டு,
ஒடுகத்தூரை அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் நடந்தன. அந்த பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் சிலை வைத்து கொண்டாட வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் உருவபடத்தை வைத்து கொண்டாட வேண்டும் என்றும் கூறினர்.
அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 1½ அடி உயர கொண்ட அம்பேத்கர் சிலை அனுமதியின்றி பொது இடத்தில் இருந்த கொடிமரத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அணைக்கட்டு தாசில்தார் உஷாராணி சம்பவ இடத்துக்கு சென்று, சிலை வைத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சிலை வைக்க வேண்டும் என்றால் கலெக்டரிடம் அனுமதிபெற வேண்டும் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி தலைமையில், அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பின்னர் தாசில்தார் உஷாராணி அம்பேத்கர் சிலையை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்துக்கு எடுத்து சென்றார்.
பின்னர் பொதுமக்கள் அம்பேத்கரின் உருவபடத்தை வைத்து பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.