பாட்டுப்பாடி மன்னரை மடக்கிய அவ்வையார்

குலோத்துங்க சோழ மன்னர் அவைக் களத்தில் கம்பர், புகழேந்தியார், ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர் பெருமக்கள் வீற்றிருந்தனர்.

Update: 2017-04-14 09:36 GMT
நாள் தோறும் புலவர் பெருமக்களால் தமிழ் மணம் கமழும் தமிழ்ச் சங்கமாகவே அரசவை விளங்கிற்று.

மன்னர் கம்பரை அரசவை கவிஞனாக அமர்த்தி அழகு பார்த்தார். கம்பர் அரசவைக் கவிஞரானதால், அதற்குரிய தனி சிறப்போடு பட்டு வேட்டியும், அங்கவஸ்திரமும், கையில் தங்கக்காப்பும் , விரல்கள் நிறைய மோதிரமும் அணிந்துகொண்டு, தனி சிறப்போடு வீற்றிருந்தார்.

மன்னர், கம்பரின் பாடல் ஒன்றை சுட்டிக்காட்டி, “கம்பனின் புலமையோ புலமை” என்று மிகை பட பாராட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு மூதாட்டி சிரித்துக்கொண்டே அவைகளத்திற்கு உள்ளே வந்தார். யார் நீங்கள்? எதற்காக சிரிக்கிறீர்கள் என்றார் மன்னர்.

வந்தவர், “மன்னா .... நான் தான் அவ்வையார்” என்றார்.

மன்னன் உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து நின்று “அவ்வை பிராட்டியாரே வாருங்கள், வாருங்கள். தங்களைப் பற்றி நிரம்ப கேள்வியுற்றிருக்கிறேன். தற்போது தான் தங்களை நேரில் பார்க்கிற பாக்கியம் கிட்டி இருக்கிறது..அமருங்கள் தாயே” என்றார். அவ்வை அமர்ந்ததும், “அவ்வையே. தாங்கள் வரும்போது சிரித்துக்கொண்டே உள்ளே வந்தீர்கள். அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் மன்னர்.

உடனே அவ்வையார் “மன்னா, ஒருவரின் படைப்பைப் பாராட்டும் போது, அந்த படைப்பில் அமைந்துள்ள சொல் நயம், பொருள் நயம் ஆகியவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டு பாராட்ட வேண்டுமே தவிர, ‘கம்பனின் படைப்பு’ என்பதற்காக மட்டும் அதனை ஆஹா.... ஓஹோ.... என்று புகழ்ந்து கொண்டிருந்தீர்கள். அதனால் சிரித்தேன்” என்றார்.

அதுமாத்திரமல்ல, அதற்கு அவ்வை ஒரு பாடல் பாடி மன்னனுக்கு விளக்கினார்.

“ விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும், அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று” என்றார்.

‘கவிஞனுக்கு அருகே இருவர் அமர்ந்து கொண்டு ஆஹா... ஓஹோ.... என்று புகழ்ந்தபடியும், விரல்கள் முழுவதும் தங்க மோதிரங்கள் அணிந்துகொண்டும், இடுப்பிலே பருத்தியாலும் பட்டாலும் செய்யப்பட்ட வஸ்திரங்களை உடுத்திக்கொண்டும், பகட்டோடு இருக்கும் ஒரு கவிஞனது கவிதை, நஞ்சைப் போல கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும், வேம்பைப்போல கசப்பாக இருந்தாலும் அந்த கவிதை அருமையிலும் அருமை என்றும், இந்த கேடுகெட்ட உலகம் போற்றும்’ என்பதாக பொருள் கொண்ட அந்த பாடலை அவ்வையார் பாடி முடித்தார்.

உடனே கம்பர், அவ்வையை ஏறிட்டு பார்த்துவிட்டு, மன்னரையும் ஒரு பார்வை பார்த்தார். பார்த்துவிட்டு வெற்றிலையை மடித்து பாக்கை உள்வைத்து வாயில் போட்டு மென்று கொண்டே சிந்திக்க தொடங்கினார்.

மன்னருக்கோ இப்போது தர்மசங்கடமான சூழ்நிலை. கம்பரிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் கொண்டவர். தன்னுடைய அவைக்களத்தில் கம்பரை ஒருவர் இகழ்ந்து பேசியது, அவருக்கும் மனவருத்தத்தை உண்டாக்கியது. இகழ்ந்து பேசியவரோ பார் போற்றும் பைந்தமிழ் அரசி அவ்வைபிராட்டியார். அவரிடம் கடுமை காட்ட இயலாது. எனவே அவ்வைக்கு புரிதல் ஏற்படுத்த முனைந்தார்.
“அவ்வையே..... கம்பன் எனக்கு மிக நெருக்கமானவர் தான், இருந்தாலும் அவரது கவிதையின் நுணுக்கச் சிறப்பை எண்ணித்தான் அவரைப் பாராட்டினேனே தவிர அவரின் புறத்தோற்றத்தை வைத்து பாராட்டவில்லை. அவரைப்போல ராமாயண காவியத்தை 10,500 பாடல்களைக் கொண்டு பாடியவர் யாரும் இருக்க முடியாது...” என்றார் மன்னர்.

உடனே அவ்வையார், “சோழ மன்னா..... மரக்கிளையில் தொங்கும் தூக்கணாங் குருவியின் கூட்டை நாமெல்லாம் பார்த்திருப்போம். அந்த குருவியின் கூட்டின் (நுழைவு) வாயிலோ கீழ்நோக்கி இருக்கும். அதற்குள் இரண்டு அறைகள் வைத்து தன் அலகால் அழகாக வடிவமைத்துக் கட்டியிருக்கும். அந்த கூட்டைப்போல வேறு எந்த பறவையாலும் அவ்வளவு ஏன் நம் போன்ற மனிதர்களாலுமே கட்டுவது என்பது இயலாத காரியம்.

அடுத்து, கரையான் புற்றினை என்றைக்காவது நாம் பார்த்து வியந்ததுண்டா? கரையான்கள் மண்ணை எடுத்து வந்து தன் எச்சிலையும் குழப்பி புற்றினை கட்டியிருக்கும். அந்த புற்றினை தூக்கணாங் குருவியாலோ அல்லது அதில் தஞ்சமடையும் பாம்பினாலோ கட்டிட முடியுமா? முடியாது தானே....?

அதுபோல மன்னா... கம்பன் விருத்தப்பா பாடுவதில் வல்லவர் என்றால், இங்கு அமர்ந்திருக்கும் புகழேந்தியார் இருக்கிறாரே அவர் வெண்பா பாடுவதில் அவரை மிஞ்சி யாருளரோ ...? புகழேந்தியாருக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஒட்டக்கூத்தர் மட்டும் சாமானியரா? அவர் உலா பாடுவதில் கைதேர்ந்தவர். இப்படி அவரவர்களுக்குள் ஒரு திறமை ஒளிந்திருக்கிறது.

கம்பருக்கு, ஒரு சோழ மன்னனும் சடையப்ப வள்ளலும் கிடைத்தது போல, இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு கவிஞனுக்கும் கிடைத்திருந்தால், தன் வீட்டின் வறுமையை மறந்து பல காப்பியங்களும் காவியங்களும் படைத்திருப்பார்கள்.

மன்னா....! திறமை இருந்தும் வாய்ப்புகளின்றி பலர் வறுமையில் வாடுவதை தங்களுக்கு நினைவூட்டு கிறேன்” என்றார். அத்தகைய பொருள் படும்...
“ வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது”

என்ற பாடலை அவ்வை பாடி முடித்தார்.

அவ்வையின் இந்த பாடலின் உட்கருத்தை கம்பராலும், சோழ மன்னராலும் மற்றும் உள்ள அவையோர்களாலும் மறுதலித்துவிட முடியவில்லை. மன்னர் சிறிது சிந்தித்தார். பிறகு, தன் மனதிற்குள் நினைத்தவராய், அவ்வை சொல்வது உண்மைதான். கம்பர் மீது அளவு கடந்த அன்பின் காரணமாகத்தான் நான் இந்த அளவிற்கு அவரை உயர்த்தி புகழ்ந்துவிட்டேன். இதனால் மற்ற புலவர்கள் அரசனாகிய என்னிடம் எதிர்வாதம் புரியாமல் மனப் புழுக்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதனை மன்னர் உணர்ந்தார்.

மேலும் செய்திகள்