திருவிளையாடல் புராணம்

‘திருவிளையாடல் புராணம்’ என்பது சிவபெருமானின் திருவிளையாடல்களை கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல்.

Update: 2017-04-14 09:31 GMT
 சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மீனாட்சி சுந்தர தேசிகருக்கு மகனாக பிறந்தார்.

மீனாட்சி சுந்தர தேசிகர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் குருகுலம் ஒன்றை நடத்தினார். அதில் தமிழ் மற்றும் வடமொழி இலக்கண, இலக்கியங்களையும், சைவ திருமுறைகளையும், ஆகம சாஸ்திரங்களையும் மாணவர்களுக்கு போதித்து வந்தார். பரஞ்சோதி முனிவர் இளம் வயதில் தம் தந்தையிடம் இருந்து தமிழ், சமஸ்கிருதம், சித்தாந்த சாஸ்திரம், சைவ திருமுறைகள் ஆகியவற்றை கற்றுக்கொண்டார். மதுரையில் சைவ சன்னியாசம் பெற்றார்.

மதுரை மீனாட்சி அம்மன், பரஞ்சோதி முனிவர் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும் படி கூறியதால் திருவிளையாடல் புராணத்தை பாடியதாக கூறப்படுகிறது. மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் கூறப்பட்டுள்ளது. ஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல் தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3,363 செய்யுள்களாக வடித்தார். இதில் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344-வது செய்யுளில் இருந்து சிவபெருமானின் திருவிளையாடல் தொடங்குகிறது.

ஒரு நாள் பரஞ்சோதி முனிவர் கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி ‘எம்பெருமான் திருவிளையாடலை சத்தியாய் என்று தொடங்கி பாடுக’ என்று
கட்டளையிட்டு மறைந்தார்.

“சத்தியாய் சிவமாகி தனிப்பர
முத்தியான முதலைத்துதி செய
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ
சித்தியானை தன் செய்யபொற் பாதமே”

- என்ற காப்புச்செய்யுளால் தொடங்கி திருவிளையாடல் புராண காவியத்தை எழுதினார். கி.பி.16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரை வீரசேகர சோழன் ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சியில் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை மதுரையில் அரங்கேற்றினார்.

அவர் வேதாரண்யத்திற்கு மேற்கில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு சிவாலயம் அமைத்து வேதாரண்யேஸ்வரரையும், யாழைப் பழித்த மொழியம்மையினையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். பின்பு பரஞ்சோதி முனிவர் சேகல் மடப்புரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் அடக்கமான இடம் அவரால் அமைக்கப்பட்ட சிவாலயத்தின் மூலையில் பிள்ளையார் கோவிலாக சமாதிக்கு உரிய விமானத்துடன் காட்சி அளிக்கிறது.

மேலும் செய்திகள்