நெல்லிக் கனியும்.. நீண்ட புகழும்..

அதியமான்கோட்டத்தில் அவ்வைக்கு அதியமான் அரிய நெல்லிக்கனியை ஈந்த காட்சி.

Update: 2017-04-14 07:38 GMT
பண்டை காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தர்மபுரி, கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டின் தலைநகராக விளங்கி சிறப்பு பெற்றது. வனவளமும், மலைவளமும் ஒருங்கே கொண்ட இந்த பகுதியில் தகரமரம் என்று அழைக்கப்படும் நெல்லி மரங்கள் அதிக அளவில் செழித்து வளர்ந்ததால் இந்த பகுதிக்கு தகடூர் என்ற பெயர் வந்தது. தமிழகத்தில் பழமையான வரலாற்று பின்னணியை கொண்ட இந்த பகுதியில் சங்ககாலம், இடைக்காலம், பிற்காலம் ஆகிய 3 காலகட்டங்களிலும் அதியமான் மன்னர்களின் ஆட்சி நடந்துள்ளது.

சங்ககாலத்தில் இந்த பகுதியை ஆண்ட மன்னர் அதியமான் தமிழ்மொழியின் மீது அளவில்லா ஈடுபாடு கொண்டவராக இருந்தார். தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் வளர்க்கும் புலவர்களை தனது நாட்டிற்கு அழைத்து அவர்களிடம் இருந்து வெளிப்படும் இனிய தமிழை கேட்டு ரசித்தார். தமிழ்மொழியில் சிறந்து விளங்கிய புலவர்களை சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த பண்பினால், புகழ்பெற்ற தமிழ் புலவர்களான அவ்வையார், அரிசில்கிழார், பரணர், பொன்முடியார் போன்றவர்களின் நன்மதிப்பை பெற்றார். தமிழ்மொழியிலும், தமிழ் இலக்கியங்களிலும் கொண்ட ஈடுபட்டாலும், ஈகை குணத்தாலும், இத்தகைய புலவர்களால் அதியமான் புகழ்ந்து பாடப்பட்டார்.
அதியமானின் ஈகை பண்பிற்கு முத்தாய்ப்பாக அமைந்தது தமிழ்புலவர் அவ்வையாருக்கு அவர் வழங்கிய பரிசு. நீண்ட காலம் உடல் நலத்துடன் கூடிய நல்வாழ்வு தரும் அரிய நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்தது.

அந்த நெல்லிக்கனியை தான் உண்ணாமல் மிகச்சிறந்த தமிழ் புலவரான அவ்வையாருக்கு பரிசாக வழங்கினார் அதியமான். இதற்கு காரணம் அவ்வையார் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்தால் அவர் மூலம் தமிழ் வாழும், அதன் மூலம் தமிழ்மொழி தழைத்தோங்கி வளரும் என்பதே.
அதியமான் அவ்வையாருக்கு வழங்கிய நெல்லிக்கனி அவருக்கு இறவா புகழை வழங்கியது. தமிழை உயிராக நினைத்த மன்னர்களின் வரலாற்றில் முக்கியமான இடத்தை அதியமானுக்கு பெற்று தந்தது. அதியமானின் தமிழ் பற்றை போற்றும் வகையில் தமிழகஅரசு தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ‘அதியமான் கோட்டம்’ என்ற வரலாற்று சின்னத்தை உருவாக்கியது.

இந்த கோட்டத்தில் உள்ள அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி அளிக்கும் அற்புத சிலை காட்சி, தமிழ்மொழியை வளர்த்த தமிழ்புலவர்களுக்கு கிடைத்த வரவேற்பையும், சிறப்பையும் தமிழர்களுக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்