அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி இன்று நாக்பூர் வருகை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி, பிரதமர் மோடி இன்று நாக்பூர் வருகிறார். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Update: 2017-04-13 23:00 GMT

நாக்பூர்,

அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி, பிரதமர் மோடி இன்று நாக்பூர் வருகிறார். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மோடி வருகை

அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) நாக்பூர் வருகிறார். நாக்பூரில் ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), ஐ.ஐ.எம். (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம்), எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கோரடி அனல்மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இதுபற்றி நேற்று அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:–

அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி நாக்பூர் வருவதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும், நாக்பூரில் அம்பேத்கருடன் நெருங்கிய தொடர்புடைய புனித தலமான தீக்ஷாபூமியில், பிரார்த்தனை செய்வேன்.

தடுமாற மாட்டோம்

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கோரடி அனல்மின் நிலைய திட்டங்கள் பொதுமக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அம்பேத்கரின் கனவான உறுதியான, செழிப்பான மற்றும் உள்ளார்ந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஒருபோதும் நாங்கள் தடுமாற மாட்டோம்.

இவ்வாறு அதில் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, நாக்பூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் கண்டனம்

பிரதமர் மோடியின் வருகைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நாசர் சகாரியா அளித்த பேட்டியில், தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை கவருவதற்காகவே மோடி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கெடுப்பதாக விமர்சனம் செய்தார்.

நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பிரதமர் மோடி சூரத் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறிய நாசர் சகாரியா, குஜராத்திலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிறைந்த பகுதிகளுக்கே மோடி சென்று அவர்களது வாக்குகளை கவர முடிவு செய்திருப்பதாக குற்றம்சாட்டினார். 

மேலும் செய்திகள்