டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: ஈரோடு கலெக்டர் வீட்டு முன்பு மாணவர்கள் திடீர் போராட்டம்

மொடக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் திடீரென்று கலெக்டர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-13 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள காமராஜர் நகர் மற்றும் அசோகபுரம் பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் 20 பேர் உள்பட 60–க்கும் மேற்பட்டோர் ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். பின்னர் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலெக்டர் வீட்டின் முன்பு உள்ள ரோட்டில் அமர்ந்து, டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எங்கள் பகுதிக்கு `டாஸ்மாக் கடை வேண்டாம்` என கோ‌ஷமிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ‘இங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. எனவே மனு கொடுத்துவிட்டு செல்லுங்கள்’ என்றனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு


அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

மொடக்குறிச்சி அருகே உள்ள அசோகபுரம் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் 500–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அசோகபுரத்தில் இருந்து நாதகவுண்டன்பாளையம் மற்றும் பரிசல்துறைக்கு செல்லும் சாலை வழியாக பள்ளிக்கூட, கல்லூரி மாணவ –மாணவிகள் மற்றும் ஈரோடு, திருப்பூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் என தினமும் ஏராளமானோர் சென்று வருகிறார்கள்.

இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின்படி நெடுஞ்சாலையோரம் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடை ஒன்றை, பரிசல்துறை ரோடு–நாதகவுண்டன்பாளையம் ரோடு சந்திப்பு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். அங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் அசோகபுரம், நாதகவுண்டன்பாளையம், எல்லை நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் இரவு நேரங்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மேலும் அந்த வழியாக பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ –மாணவிகள் மற்றும் பணிக்கு சென்று விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பற்ற நிலையில், அச்சத்துடன் கடந்து செல்லவும், அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே காமராஜர் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

மேலும் செய்திகள்