மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை உருவாக்கிட தொழில் அதிபர்களுடன் நாராயணசாமி ஆலோசனை

மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை உருவாக்குவது தொடர்பாக தொழில் அதிபர்களுடன் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2017-04-13 23:00 GMT
புதுச்சேரி,

மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை உருவாக்குவது மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக தொழில் அதிபர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் மனோஜ் பரிதா மற்றும் அரசு செயலாளர்கள், துறை இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

மானியம்


கூட்டத்தில், புதுவை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது தொடர்பாக சென்னையை சேர்ந்த அரசு நிறுவனமான இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் இயக்குனர் சஞ்சய் தியாகி, இணை இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் பேசினார்கள். ஐ.பி.பீ.ஓ. என்ற திட்டத்தின்படி புதுச்சேரிக்கு 100 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கினால் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்று இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா இயக்குனர் சஞ்சய் தியாகி கூறினார்.

விப்ரோ டெக்னாலஜிஸ் லிமிடெட் சார்பில் எந்திரங்கள் உற்பத்தி செய்வது தொடர்பான தொழிற்சாலை ரூ.100 கோடி செலவில் அமைப்பதற்கும், மிட்காம் நிறுவனம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது சம்பந்தமான கட்டுமானங்கள் பற்றியும், ராஸ் மவுண்ட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் ஹைட்ராலிக் பம்ப் உற்பத்தி பற்றியும் எடுத்துக் கூறினார்கள். புதுச்சேரியில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு தங்களுடைய ஆர்வத்தினை வெளிப்படுத்தினார்கள்.

நாராயணசாமி வேண்டுகோள்


மேலும் சில நிறுவனங்கள் பேரிடர் மேம்பாடு திட்டங்கள் பற்றியும், கல்வி வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளித்தன. கூட்டத்தில் பேசிய முதல்– அமைச்சர் நாராயணசாமி, ‘புதுச்சேரியில் இந்தநிறுவனங்கள் தொழிற்சாலைகளை தொடங்கி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்