திருச்சி அரசு மருத்துவமனை அருகே ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து எடுத்து சென்றனர்.

Update: 2017-04-13 23:00 GMT
திருச்சி,

திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தை சேர்ந்தவர் சார்லஸ் ஜெர்ரி (வயது 40). இவர் திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஜெராக்ஸ் கடை மற்றும் இயற்கை உணவு பொருட்கள் கடையும் வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் திருடு போயிருந்தது.

போலீசார் விசாரணை

மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 கண்காணிப்பு கேமராக்களில் ஒரு கேமராவை உடைத்து எடுத்தும், கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை காண்பிக்கும் கணினி மற்றும் உபகரணங்களையும் எடுத்து விட்டு பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விரல்ரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே கடையின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்