ஏமூர் அருகே மதுபானக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ஏமூர் அருகே மதுபானக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-13 23:00 GMT
கரூர்,

கரூரை அடுத்த ஏமூர் அருகே குன்னனூர் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் புதிதாக மதுபானக்கடை வைக்க ஊழியர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த கடையில் மதுபானங்களை அடுக்கிவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் குன்னனூரில் மதுபானக்கடை வைக்க கூடாது. மீறி வைத்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறி நேற்று மதியம் 12 மணி அளவில் கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

பல்வேறு பிரச்சினைகள்

குன்னனூர் சாலை வழியாகத்தான் தெற்கே ஏமூர், வடக்கே காந்திகிராமம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும் இந்த பகுதியில் 2 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில் படிக்கும் மாணவ- மாணவிகள் இந்த வழியாகத்தான் பள்ளி செல்ல வேண்டும். விவசாய நிலங்கள் அதிக அளவு உள்ளன. எனவே இங்கு மதுபானக்கடை வைத்தால் மாணவ- மாணவிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த பகுதி முழுவதும் தெருவிளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் நடப்பதற்கே பயமாக இருக்கும். இதனால் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே குன்னனூர் பகுதியில் மதுபானக்கடை வைக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்குவாதம்

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு மதுபானக்கடையை திறப்பதற்காக விற்பனையாளர், உதவியாளர்கள் வந்தனர். அப்போது கடை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திக்கொண்டு இருப்பதை பார்த்ததும் அவர்கள் அங்கேயே அமைதியாக நின்றுகொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

பரபரப்பு

இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்போது இந்த பகுதியில் மதுபானக்கடை வைக்கப்படமாட்டாது என்று போலீசார் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்