சேலம் அஸ்தம்பட்டி–மத்தியசிறை வரை ரூ.25 லட்சத்தில் சாலையோரம் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கியது வியாபாரிகள் மறியல் முயற்சி

சேலம் அஸ்தம்பட்டி–மத்திய சிறைவரை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சாலையோரம் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2017-04-13 23:15 GMT

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கோரிமேடுவரை உள்ள ஏற்காடு சாலையில், சாலையோர வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து தொழில் செய்து வந்தனர். சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த சாலையின் ஓரமாக, கடைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதையும் மீறி சாலையோர வியாபாரிகள் மாம்பழங்கள், தர்பூசணி, நுங்கு மற்றும் இதர பழக்கடைகளையும், தள்ளுவண்டியில் வடை விற்பனை செய்தும் வந்தனர். இந்த கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கருதி, பலமுறை சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டாலும் திரும்பவும் அங்கு வியாபாரிகள் கடை வைப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சம்பத் உத்தரவின்பேரில், அதை நிரந்தரமாக அகற்றும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோர வியாபாரக்கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.

மறியல் முயற்சி

அதன் பிறகு, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சாலையோர வியாபாரிகள் மீண்டும் அதே இடத்தில் வியாபாரம் செய்வதற்கு மனு கொடுத்தனர். அந்த மனுவிற்கு உரிய பதில் கொடுக்கப்பட வில்லை.

இருப்பினும் சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு வாழ்வாதாரம் ஏதும் இல்லை எனக்கூறி நேற்று சிலர் கடைகளை வைத்தனர். அங்கு கடைவைக்க அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அனுமதிக்கவில்லை. பின்னர் ஏற்காடு ரோட்டில் கோர்ட்டு முன்பு வியாபாரிகள் மறியலுக்கு முயற்சித்தனர். அதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

ரூ.25 லட்சத்தில் நடைபாதை

மாநில நெடுஞ்சாலையில் சாலையோரம் தற்காலிக கடைகள் வைப்பதை தவிர்க்கும் வகையில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா முதல் மத்திய சிறை நுழைவாயில்வரை உள்ள சாலையின் இடதுபுறம் மட்டும் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைக்க சேலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடைபாதை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் அஸ்திவாரம் தோண்டும் பணி நேற்று மதியம் தொடங்கியது. ஒரு மாதத்திற்குள் நடைபாதை அமைக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்