மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடலில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நாளை முதல் தொடக்கம்
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடலில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நாளை முதல் தொடங்குவதாக கலெக்டர் ராஜேஷ் கூறியுள்ளார்.
கடலூர்,
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்வளத்தை பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதேப்போல் இந்த ஆண்டும் நாளை(சனிக்கிழமை) முதல் 45 நாட்கள் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள கடல் பகுதி முழுவதும்(திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15–ந்தேதி முதல் மே மாதம் 29–ந்தேதி முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திரா கடற்பகுதிகடந்த 15 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த தடை ஆணையின்படி இந்த ஆண்டும் விசைப்படகுகளும், இழுவலைப்படகுகளும் 45 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 45 நாட்கள், கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி மேற்குறிப்பிட்டுள்ள 45 நாட்கள் முடியும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள், விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதேப்போல் ஆந்திரா கடற்பகுதியில் ஏப்ரல் 15–ந்தேதி முதல் ஜூன் 14–ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை தவிர வேறு எந்த வகையான மீன்பிடி படகுகளைக் கொண்டும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வலைகளை சீரமைக்கும் பணியில்...கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், பைபர் மற்றும் விசை படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
அந்த வகையில் கடலூர் துறைமுகத்திற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 100 டன் அளவிற்கு மீன்வரத்து காணப்படும். பெரும்பாலும் இங்கு பிடிக்கப்படும் மீன்களை வெளிமாநில வியாபாரிகள் வாங்கி, லாரிகள் மூலம் கேரளா, கர்நாடகாவுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதே போல் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மற்றும் தாழங்குடா பகுதிகளில் இருந்து ஏராளமான மீனவர்கள் தங்களது படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மீன்பிடி தடைகாலம் நாளை முதல் அடுத்த மாதம்(மே) 30–ந் தேதி வரை 45 நாட்கள் அமல்படுத்தப்படுவதால், நேற்று முதலே மீனவர்கள் யாரும் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கடலூர் துறைமுகப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பல மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை லாரிகளில் ஏற்றி சீரமைக்கும் பணிக்கு அனுப்பி வைப்பதை காணமுடிந்தது.