வேடிக்கை பார்க்க வந்தவருக்கு நேர்ந்த கதி: ஆட்டோ டிரைவரை கடித்த கண்ணாடி விரியன் பாம்பு

வேடிக்கை பார்க்க வந்தபோது ஆட்டோ டிரைவரை கண்ணாடி விரியன் பாம்பு கடித்ததால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2017-04-11 23:30 GMT

கடத்தூர்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பி.பி.எம். நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 33). ஆட்டோ டிரைவர். அந்த பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டியை அடுத்த தோட்டத்தின் அருகே நேற்று பகல் 11 மணி அளவில் பெண்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள முட்புதரில் இரையை தின்று வயிறு புடைத்த நிலையில் நகர முடியாமல் பாம்பு ஒன்று கிடந்ததை பெண்கள் பார்த்து உள்ளனர். அப்போது அவர்கள், ‘அதன் தோற்றத்தை பார்த்து அது ஒரு மலைப்பாம்பு என நினைத்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது.

வேடிக்கை பார்க்க கூடினர்

தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பாம்பை வேடிக்கை பார்க்க கூடினர். இதை வேடிக்கை பார்க்க ஆனந்தனும் அங்கு வந்தார். மலைப்பாம்பு என அங்கு நின்றவர்கள் கூறியதால் அவருக்கு அசட்டு துணிச்சல் ஏற்பட்டது. இரையை தின்றுவிட்டு நகர முடியாமல் கிடக்கிறது. என்ன செய்யப்போகிறது என்று நினைத்து முட்புதரில் இருந்த அந்த பாம்பை கையை விட்டு லாவகமாக தூக்கி ரோட்டில் போட்டார்.

அந்த பாம்பு எங்கும் நகராமல் ரோட்டில் அப்படியே கிடந்தது. இதைத்தொடர்ந்து அவர் ரோட்டில் கிடந்த பாம்பை மீண்டும் 2–வது முறையாக தூக்குவதற்காக அந்த பாம்பின் கழுத்தை பிடிக்க முயன்றார்.

சிகிச்சை

முதல் தடவை அமைதியாக இருந்த அந்த பாம்பு 2–வது முறையாக தூக்க முயன்றபோது சீறியதுடன் அவருடைய வலது கையின் ஆள்காட்டி விரலை கடித்துவிட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பாம்பை பார்வையிட்டனர்.

கண்ணாடி விரியன் பாம்பு

அப்போது ‘அந்த பாம்பு மலைப்பாம்பு இல்லை. கொடிய வி‌ஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு. ஏதோ பெரிய இரையை தின்று விட்டதால் அதன் வயிறு புடைத்து விட்டது. இதனால் அந்த பாம்பால் நகர முடியவில்லை,’ என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த பாம்பை மீட்டு சாக்குப்பையில் எடுத்துக்கொண்டு சென்று டி.என்.பாளையம் வனப்பகுதியில் விட்டனர். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது மலைப்பாம்பு என தவறாக நினைத்து விபரீத எண்ணத்தில் கண்ணாடி விரியன் பாம்பை தூக்கிய ஆட்டோ டிரைவரை பாம்பு கடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்