கும்மிடிப்பூண்டி அருகே பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி பொதுமக்கள் பஸ்சை சேதப்படுத்தினர்

Update: 2017-04-09 22:45 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அருகே பஸ்–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சை சேதப்படுத்தினர்.

சாவு

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மகன் சசிபிரீதம் (வயது 21). இவர் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜீனியரிங் 4–ம் ஆண்டு படித்து வந்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த சசிபிரீதம், நேற்று கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த விளையாட்டு விழாவுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னம்பேடு அருகே சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் செல்லும்போது, சின்னம்பேடு கிராமத்தின் சாலை திருப்பத்தில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு திரும்பிய அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சசிபிரீதம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பஸ்சை சேதப்படுத்தினர்

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டு தகடுகளை உடைத்து சேதப்படுத்தினர். தகவலறிந்து கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான சசிபிரீதத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்