என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு எதிரான போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு எதிராக கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில்

Update: 2017-04-06 22:45 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே அமைந்துள்ள ஊ.ஆதனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் என்.எல்.சி. 2–வது சுரங்க விரிவாக்க பணிக்காக அதிகாரிகள் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள வீடுகளை அகற்ற முயன்றனர். அப்போது, இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கல்வீசி தாக்கியதால் என்.எல்.சி.க்கு சொந்தமான 3 லாரிகள் சேதமடைந்தன. மேலும், என்.எல்.சி. அதிகாரிகளையும் சிலர் தாக்கி, விரட்டியடித்ததாக தெரிகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்.எல்.சி. வாகனங்களை சேதப்படுத்தியதாக 7 பேரை கைது செய்தனர். இதனால் அந்த கிராம மக்கள் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகை

இதற்கிடையே இப்பிரச்சினைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதரவு தெரிவித்து, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், நுழைவு வாயிலில் தடுப்புக்கட்டை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஊ.ஆதனூர் கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானவர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில், கிராம மக்கள் மற்றும் அந்த கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர்கள் கதிர்வாணன், பால.அறவாழி, மண்டல செயலாளர் திருமாறன், மாவட்ட பொருளாளர் துரை.மருதமுத்து, தொகுதி செயலாளர் அய்யாயிரம், மாவட்ட தொண்டரணி மருதையன், மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, அசுரன், மணிவாசகம், மாநில ஊடக பிரிவு துணை செயலாளர் ராஜ்குமார், நகர செயலாளர்கள் மணிமாறன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோட்டாட்சியரிடம் சந்திப்பு

முற்றுகையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து, அலுவலகத்திற்குள் நுழையாதவாறு தடுப்புக்கட்டைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அலுவலகத்திற்குள்ளே நுழைய முடியாததால் போராட்டக்காரர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் போலீசாரை கண்டித்தும், போராட்டத்தில் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் கோட்டாட்சியரை சந்திக்க அனுமதி அளித்தனர். அதன்படி, நிர்வாகிகள் சிலர் அலுவலகத்திற்குள் சென்று அங்கிருந்த கோட்டாட்சியர் கிருபானந்தனை சந்தித்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மனுவை பெற்ற அவர், உயர் அதிகாரிகளிடம் பேசி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏற்றனர். இதையடுத்து, நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் கூறியதை தெரிவித்தனர். பின்னர், அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்