மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கம்மாபுரம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கம்மாபுரம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-04-06 22:45 GMT

விருத்தாசலம்,

தமிழகம் முழுவதும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த வகையில் விருத்தாசலம்–சிதம்பரம் சாலையில் உள்ள கம்மாபுரத்தில் இருந்த 2 கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் சில நபர்கள், கம்மாபுரம் கிராமத்திற்கு வந்து அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தனர். இதனால் குடிபிரியர்கள் மதுஅருந்திவிட்டு போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல் முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் கம்மாபுரம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி அறிந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து மதுபாட்டில் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது, கிராம மக்கள் கூறுகையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்