கடனை கேட்டு துன்புறுத்துவது தற்கொலைக்கு தூண்டுவதற்கு சமம் ஐகோர்ட்டு கருத்து

கடனை கேட்டு ஒருவரை துன்புறுத்துவது தற்கொலைக்கு தூண்டுவதற்கு சமமானது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.;

Update:2017-04-03 03:50 IST

மும்பை,

கடனை கேட்டு ஒருவரை துன்புறுத்துவது தற்கொலைக்கு தூண்டுவதற்கு சமமானது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

கடன் தொல்லை

மும்பை நகர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் பாம்லே. இவர் வட்டிக்கு கடன் கொடுத்து சம்பாதித்துவரும் குருநாத் மற்றும் சங்கீதா ஆகியோரிடம் ரூ. 19 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் உமேஷ் பாம்லே தவித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த குருநாத் மற்றும் சங்கீதா இருவரும் உமேஷ் பாம்லேவே உடல் மற்றும் மன ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 2014–ம் ஆண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர். இந்த நிலையில் உமேஷ் பாம்லேவின் மனைவி, குருநாத் மற்றும் சங்கீதா இருவர் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.எம். பதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது:–

அசாதாரண சூழ்நிலை

பாதிக்கப்பட்டவர் நபர் எப்படியாவது வாங்கிய கடனை திரும்ப கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடனேயே இருந்துள்ளார். இருப்பினும் அவரது அசாதாரண சூழ்நிலை அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது.

குருநாத் மற்றும் சங்கிதா இருவரின் நெருக்கடி தான், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் முன் அவமானப்பட்டு வாழ்வதை விட சாவதே மேல் என்ற மனநிலைக்கு உமேஷ் பாம்லேவை கொண்டு சென்றுள்ளது. இதுவும் தற்கொலைக்கு தூண்டுவதற்கு சமமானது.

இவ்வாறு நீதிபதி ஏ.எம்.பதர் கூறினார்.

மேலும் செய்திகள்