நெல்லை மாவட்டத்தில் மதுக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று மதுக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த கடைகளில் சரக்குகள் காலையிலேயே விரைவாக விற்று தீர்ந்ததால் உடனுக்குடன் லாரிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

Update: 2017-04-02 23:00 GMT
நெல்லை,


தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள மதுக்கடைகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் (1–ந்தேதி ) நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இருந்த 128 மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், மேலும் ஓட்டல்களுடன் இணைந்த உரிமம் பெற்ற 18 மதுபான கூடங்களும் நேற்று முன்தினம் மூடப்பட்டன.

மக்கள் கூட்டம்


நெல்லை மாநகரில் சந்திப்பு பஸ் நிலையம், எஸ்.என்.ஹைரோடு, வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை, புதிய பஸ் நிலைய பகுதி, டவுன் காட்சி மண்டபம், அபிஷேகப்பட்டி, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் நேற்று மூடப்பட்டு விட்டன. நெல்லை மாநகரில் டவுன்– குறுக்குத்துறை ரோடு, மகாராஜ நகர் உழவர் சந்தை பகுதி, டவுன் மாடத்தெரு, தச்சநல்லூர், திருமால் நகர் ஆகிய இடங்களிலும், புறநகர் பகுதியில் ஒருசில இடங்களில் மட்டுமே மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் கடை எங்கே இருக்கிறது ? என்று ‘குடி’ மகன்கள் தேடி அலைந்தனர். ஆங்காங்கே விசாரித்து ஒருவழியாக கடைகளை கண்டுபிடித்து நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் திறந்திருந்த மதுக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிலர் காலையிலேயே வந்து கல், கட்டைகளை போட்டு வரிசைக்கு இடம் பிடித்து வைத்திருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு


இதையொட்டி மதுக்கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது குடிமகன்கள் விரட்டி அடித்தனர். நெல்லை டவுன் குறுக்குத்துறை ரோட்டின் இருபுறமும் குடிமகன்கள், தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சாரை, சாரையாக சரக்கு பிரியர்கள் கடைக்கு வந்து, சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் அந்த ரோட்டில் திருவிழா பார்க்க வந்தது போல் கூட்டம் அலைமோதியது.

லாரிகளில் சரக்கு


இந்த கடைகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கே மதுபாட்டில்கள் விற்று தீர்ந்து விட்டன. இதையொட்டி நேற்று டாஸ்மாக் குடோனில் இருந்து லாரிகளில் அந்தந்த கடைகளுக்கு மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக அனுப்பி வைக்கப்பட்டன. அவை டாஸ்மாக் கடையில் இறக்கி வைக்கப்பட்டு, கடை திறந்து 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.

மாவட்டத்தில்...


இதையடுத்து உடனடியாக மீண்டும் லாரிகளில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டன. அதில் பாதி அளவுக்கு லோடு இறக்கி விட்டு, மீதம் இருந்த மதுபாட்டில்களை தயார் நிலையில் லாரியிலேயே வைத்திருந்தன. மது விற்பனைக்கு ஏற்ப அவை லாரியில் இருந்து கீழே இறக்கி விற்பனை செய்யப்பட்டன. கடையம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று திறக்கப்பட்டு இருந்த கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. இந்த கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

கூடுதல் விலை


ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடைகளில் குவாட்டருக்கு ரூ.5, ஆப்–க்கு ரூ.10, முழு பாட்டிலுக்கு ரூ.20 என கூடுதல் தொகை வசூலித்து வந்தனர். இந்த நிலையில் தட்டுப்பாடு நிலவுவதை பயன்படுத்தி, இதை விட கூடுதல் தொகையை கடை ஊழியர்கள் வசூலிப்பதாக மதுபிரியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் கடை எண்ணிக்கை குறைக்கப்பட்ட போதிலும், இருக்கும் கடைகளில் கூடுதல் கவுண்டர்களை திறந்து மது பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இனிப்பு வழங்கினர்


இதற்கிடையே நெல்லை டவுனில் சமூகநீதி மாணவர்கள் இயக்கம் சார்பில் முகமது கவுஸ், பாட்டப்பத்து பாபு ஆகியோர் தலைமையில் மதுக்கடைகள் மூடப்பட்டதை கொண்டாடும் வகையில் நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவில் முக்கு அருகில் மேலரதவீதியில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். மீதமுள்ள மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்