கோவில்பட்டியில் மாநில ஆக்கி போட்டி தொடங்கியது

கோவில்பட்டியில் மாநில அளவிலான ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.;

Update: 2017-04-02 22:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் தமிழக அரசு சார்பில் ரூ.7½ கோடியில் அமைக்கப்பட்ட செயற்கை புல்வெளி ஆக்கி மைதானம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த ஆக்கி மைதானத்தில் மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டி வருகிற 6–ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 31 மாவட்டங்களில் இருந்து 600–க்கும் மேற்பட்ட ஆக்கி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டியின் முடிவில், தமிழக ஜூனியர் ஆக்கி அணிக்கு 18 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடக்க உள்ள 5–வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.

தொடக்க விழா

போட்டி தொடக்க விழாவில், மாவட்ட ஆக்கி கழக தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். வேல்ஸ் வித்யாலயா பள்ளிக்கூட தாளாளர் நாகமுத்து, மாவட்ட ஆக்கி கழக துணை தலைவர் திலகரத்தினம், பொருளாளர் சீனிவாசன், செயலாளர் குருசித்திர சண்முகபாரதி, துணை செயலாளர் முருகன், ஆக்டிவ் மைண்ட்ஸ் அமைப்பின் தலைவர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஆக்கி கழக தலைவர் செல்லத்துரை அப்துல்லா, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவருமான முகமது ரியாஸ் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். முன்னதாக முகமது ரியாசுக்கு, ஆக்கி வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி, காஞ்சீபுரம் அணிகள் வெற்றி

முதல் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணியும், திருவாரூர் ஆக்கி அணியும் விளையாடின. இதில் தூத்துக்குடி அணி 10–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2–வது போட்டியில் காஞ்சீபுரம் மாவட்ட அணியும், திருவண்ணாமலை அணியும் விளையாடின. இதில் 4–3 என்ற கோல் கணக்கில் காஞ்சீபுரம் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன.

இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா பரிசு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்