போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2017-04-02 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அவர் திருவாரூர் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்தினை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் போலியோ நோயினை ஒழிக்கும் விதமாக போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குஇன்று(அதாவது நேற்று) முதல் தவணையாக வழங்கப்படுகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள். சொட்டு மருந்து வழங்க ஊரக பகுதிகளில் 800 முகாம்கள் , நகர்பகுதிகளில் 70 முகாம்கள் என மொத்தம் 870 முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

3,480 பணியாளர்கள்

பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் செங்கல் சூளை தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், சாலைப்பணி தொழிலாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவர்கள், பிற மாநில தொழிலாளர் களுக்கு (பொம்மை செய்பவர்கள், இரும்பு வேலை செய்பவர்கள் போன்றவர்கள்) சிறப்பு கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இப்பணியில் மொத்தம் 3 ஆயிரத்து 480 பணி யாளர்கள் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் இப் பணியை மேற்பார்வையிட ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 112 மேற்பார்வையாளர் களும், வட்டார அளவில் 10 கண்காணிப்பாளர்களும், மாவட்ட அளவில் 8 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 130 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் இணை இயக்குனர் அசோகன், துணை இயக்குனர் செந்தில்குமார், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்