ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

Update: 2017-04-02 23:00 GMT
விருதுநகர்,

ஸ்மார்ட் கார்டு

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்ட தொடக்க விழா சிவகாசியில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்மார்ட் கார்டுகளை பொதுமக்களுக்கு வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

மாவட்டத்தில் உள்ள 961 நியாயவிலைக்கடைகள் மூலமாக பொதுவினியோகத்திட்டத்தில் பயன்பெற்று வரும் 5 லட்சத்து 35 ஆயிரத்து 396 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. சிவகாசி தாலுகாவில் முதற்கட்டமாக 43 ஆயிரத்து 298 ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா இங்கு நடைபெறுகிறது. மாவட்டத்தில் பிற குடும்ப அட்டைதாரர் களுக்கும் விரைந்து வழங்கப்பட உள்ளது. ஸ்மார்ட் கார்டு பெறும் வரை பழைய குடும்ப அட்டைகளை வைத்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

7 நாட்கள்

மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 35 ஆயிரத்து 396 குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விவரங்கள் அவ்வப்போது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் பொதுவினியோகத் திட்டம் சார்ந்த குறைகளை தெரிவிப்பதற்கு ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி சேவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளில் பதிவுசெய்துள்ள செல்போனுக்கு, ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தியுடன் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும் ரகசிய குறியிட்டு எண் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் தங்களுக்குரிய நியாய விலைக்கடைகளுக்கு சென்று ஸ்மார்ட் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில் ஆறுமுகம், துணைப்பதிவாளர்கள் ராமமூர்த்தி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்