பொள்ளாச்சி பெரியார் காலனியில் பாலம் கட்டும் பணி மும்முரம்
பொள்ளாச்சி நகராட்சி 33–வது வார்டு பெரியார் காலனியில் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 33–வது வார்டு பெரியார் காலனி பகுதியில் 200 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பெரியார் காலனியில் கிழக்கு பகுதியில் காலனியின் குறுக்கே கழிவுநீர் ஓடை செல்கிறது. இதனால் கோட்டூர் பகுதியில் உள்ள மக்கள் தெப்பக்குளம் வீதி வந்து, அங்கிருந்து பத்ரகாளியம்மன் கோவில் வழியாக தான் வேண்டும்.
இதற்கு முன் கோட்டூர் ரோடு ரெயில்வே கேட் வழியாக வந்து கொண்டிருந்தனர். தற்போது ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருவதால் ரெயில்வே நிர்வாகம் தடுப்புச்சுவர் அமைத்து விட்டனர். இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பாலம் கட்டும் பணிமேலும் நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமானால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று, அதன்பிறகு அங்கிருந்து ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஒரு சில நேரங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் ஒரு சிலர் இறந்து உள்ளனர். மேலும் யாராவது இறந்தாலும் சுற்றி தான் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக பெரியார் காலனியை இணைக்கும் வகையில் கழிவுநீர் ஓடையின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் பாலம் கட்டும் பணியை தொடங்கி உள்ளது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பெரியார் காலனி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டம்இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–
பொள்ளாச்சி நகராட்சி 33–வது வார்டு பெரியார் காலனி கிழக்கு பகுதியில் கழிவுநீர் ஓடை குறுக்கே நகராட்சி நிதி மூலம் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 30 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படுகிறது. தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.