4–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.5 கோடிக்கு கொப்பரை தேங்காய் தேக்கம்

4–வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் ரூ.5 கோடி மதிப்புள்ள கொப்பரை தேங்காய் தேக்கம் அடைந்துள்ளது.

Update: 2017-04-02 22:30 GMT

பொள்ளாச்சி,

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் கடந்த 30–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நேற்று 4–வது நாளாக போராட்டம் நீடித்ததால் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளியூர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இளநீர், தேங்காய், தென்னை நார் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களும் குடோன்களிலும், தோட்டங்களிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கொப்பரை தேங்காய் தேக்கம்

பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, நெகமம் போன்ற பகுதிகளில் கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 200–க்கும் மேற்பட்ட உற்பத்தி களங்கள் உள்ளன. இவற்றை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமும், வெளி மார்க்கெட்டிலும் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் ரூ.5 கோடி மதிப்புள்ள கொப்பரை தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.

மேலும், கொப்பரை உற்பத்தி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளனர். இது குறித்து கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:–

கடும் சவால்

ஏற்கனவே கடும் வறட்சி காரணமாக தேங்காய் விளைச்சல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. தற்போது தென்னை மரங்களை காப்பாற்றுவது, தோட்டத்தை பராமரிப்பது கடும் சவாலாக உள்ளது. தேங்காய் விளைச்சல் குறைவுக்கு ஏற்ப அரசு கொள்முதல் நிலையங்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மற்றும் காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள வெளிமார்க்கெட்டிலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை உயரவில்லை. அரசு கொள்முதல் மையத்தில் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.59.50 ஆகவும், வெளிமார்க்கெட்டில் ரூ.87 முதல் ரூ.89 ஆகவும் உள்ளது

ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, ரொக்க பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு, கடும் வறட்சி உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து முழுமையாக மீளாத நிலையில், லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொப்பரை தேங்காய்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

தீர்வு காண வேண்டும்

இதன் காரணமாக பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, நெகமம் பகுதிகளில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள கொப்பரை தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் உலர் களங்களில் கொப்பரை தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து தரப்பினரின் நலன் கருதி லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும்.

இல்லையெனில் பொருட்களின் தேக்கம் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு பாதிப்பும் அதிகமாகும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்