ஹாவேரி தாலுகா நிரலகி அருகே தனியார் பஸ்– லாரி நேருக்குநேர் மோதல்; டிரைவர் சாவு 15 பயணிகள் படுகாயம்
ஹாவேரி தாலுகா நிரலகி அருகே தனியார் பஸ், லாரி நேருக்குநேர் மோதிக்கொண்டன.
உப்பள்ளி,
ஹாவேரி தாலுகா நிரலகி அருகே தனியார் பஸ், லாரி நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ஆம்னி பஸ்– லாரி மோதல்பெங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை உப்பள்ளியை சேர்ந்த டிரைவர் லாவா (வயது 45) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் அந்த பஸ், ஹாவேரி தாலுகா நிரலகி அருகே தடசு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வந்த போது அந்த சாலையில் எதிரே வந்த லாரி, தனியார் பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி மற்றும் பஸ்சின் முன்பகுதிகள் நொறுங்கியது. விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து பஸ்சில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
டிரைவர் சாவுஅப்போது பஸ் டிரைவர் லாவா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனது தெரியவந்தது. மேலும் பஸ்சில் இருந்த 15 பயணிகள் படுகாயம் அடைந்திருப்பதும், 5 பயணிகள் லேசான காயம் அடைந்ததும் தெரிந்தது. இதுகுறித்து அறிந்த தடசு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் படுகாயம் அடைந்த 15 பயணிகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஹாவேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த 5 பயணிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மேலும் விபத்தில் இறந்த பஸ் டிரைவர் லாவாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக, அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தடசு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகிறார்கள்.