லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நீடிப்பு: கடந்த 4 நாட்களில் ரூ.800 கோடி சரக்குகள் தேக்கம்

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பை திரும்ப பெற வேண்டும்

Update: 2017-04-02 23:00 GMT

சேலம்,

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் கடந்த 30–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. சேலம் மாவட்டத்தில் 36 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த லாரிகள் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கடந்த 4 நாட்களில் ரூ.800 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இவைகள் குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:–

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தால் காய்கறிகள் வரத்து இல்லை. இதனால் அதன் விலை உயர்ந்துள்ளது. மேலும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று(திங்கட்கிழமை) முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாததால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே லாரி உரிமையாளர்களை அழைத்து அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்