டாஸ்மாக் கடைகள் திடீல் மூடல்: கூடலூர் பகுதியில் அலைமோதிய மதுபிரியர்கள்
டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால் கூடலூர் பகுதியில் மதுபிரியர்கள் மதுபாட்டில்கள் கிடைக்காமல் அங்கும் இங்குமாக அலைமோதினர்.;
கூடலூர்,
தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள 3 ஆயிரத்து 321 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 31–ந் தேதி உத்தரவிட்டது. இதையொட்டி சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூடியது. நீலகிரி மாவட்டத்தில் 93 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவையொட்டி தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் 16, மாநில சாலையோரம் இருந்த 13 என மொத்தம் 29 டாஸ்மாக் கடைகள் நேற்றுமுன்தினம் மூடப்பட்டன. இதில் கூடலூர் நகரில் செயல்பட்டு வந்த 7 டாஸ்மாக் கடைகள், பாடந்தொரை, தேவர்சோலை, நெலாக்கோட்டை, பாட்டவயல், நாடுகாணி, தேவாலா, பந்தலூர் என மொத்தம் 15 இடங்களில் டாஸ்மாக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டன.
அலைமோதிய மதுபிரியர்கள்இதனை அறியாத மதுபிரியர்கள் காலை முதல் மதுபானங்கள் கிடைக்காமல் அங்கும், இங்குமாக அலைமோதினர். கூடலூர் நகரில் தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள தனியார் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் கடும் அவதி அடைந்தனர். இருப்பினும் அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ள தனியார் மதுக்கடை மட்டும் திறந்து இருந்தது.
இதனால் அந்த மதுக்கடையில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீசார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை காணப்பட்டது. இதனிடையே கூடலூர் நகரில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சுமார் 10 கி.மீட்டர் தூரம் உள்ள சூண்டி, மண்வயல் டாஸ்மாக் கடைகளை தேடி மதுபிரியர்கள் வாகனங்களை எடுத்து கொண்டு செல்லும் பரிதாப நிலையை காண முடிந்தது. இதனால் மண்வயல், சூண்டி கடைகளில் மதுபானங்கள் விரைவாக விற்பனையாகியது.
வியாபாரம் பாதிப்புமேலும் அண்டை மாநில சுற்றுலா பயணிகளும் இப்பாதிப்புக்கு ஆளாகினர். இதேபோல் அரசு டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால் கூடலூர் நகரம் உள்பட பந்தலூர், தேவாலா, பிதிர்காடு, தேவர்சோலை, நெலாக்கோட்டை, தேவர்சோலை உள்ளிட்ட முக்கிய பஜார்களில் இரவு 7 மணிக்கு வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மூடப்பட்ட கடைகளை வேறு இடத்தில் திறப்பதற்கு டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக டாஸ்மாக் கடைகளை திறப்பதில் காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடைகளை திறக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.